வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் ஜூலை 16 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

மழை |கோப்புப் படம் 

மழை |கோப்புப் படம் 

Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் ஜூலை 16-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி சுமார் 0.9 கிமீ உயரத்தில், ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. தெலங்கானாவிலிருந்து கர்நாடக கடலோரப்பகுதிக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் வரை சுமார் 1.5 கிமீ முதல் 3.1 கிமீ உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக நாளை (ஜூலை 11) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 12, முதல் 14-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் இதர தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 15-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 16-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் 12 முதல் 14-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர்ந்தும், இதர பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும்.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 6 செமீ, விண்ட் வொர்த் எஸ்டேட், சென்னை அம்பத்தூர், தஞ்சாவூர் மாவட்டம் எச்சன்விடுதியில் தலா 5 செமீ, சென்னை கொரட்டூர், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், சோலையார், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, திருவள்ளூரில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>மழை |கோப்புப் படம்&nbsp;</p></div>
“காவிரி நீரை பெற பிரதமரின் தலையீட்டை கோராதது ஏன்?” - பழனிசாமிக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in