நீலகிரி, ஈரோடு, கோவையில் கனமழை வாய்ப்பு | வானிலை முன்னறிவிப்பு

நீலகிரி, ஈரோடு, கோவையில் கனமழை வாய்ப்பு | வானிலை முன்னறிவிப்பு
Updated on: 
1 min read

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நாளை (அக்.1) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வட கடலோர தமிழக பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை சுமார் 0.9 கிமீ உயரத்தில் தமிழக பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (அக்.1) நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

திருச்சி, நாமக்கல், தேனி, தென்காசி, திருப்பூர், திண்டுக்கல் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்.2-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், 3, 4 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், 5, 6 தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், பெரியபட்டி, திருவண்ணாமலை மாவட்டம் பிஞ்சூர், இறையூர், பாலியப்பட்டில் தலா 7 செமீ, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 6 செமீ, திண்டுக்கல் புகையிலை நிலையம், வேடசந்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி, ஈரோடு, கோவையில் கனமழை வாய்ப்பு | வானிலை முன்னறிவிப்பு
“என் கனவு... வாழ்நாள் பொக்கிஷம்...” - கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த ‘டோரதி’ அனுபவம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in