

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் (மே 20, 21) இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, இன்றும் நாளையும் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
இன்றுமுதல் மே 23-ம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்திலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான பெய்யக்கூடும்.
மே 23-ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவு. எனினும், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை சற்று உயரக்கூடும். சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.