

சென்னை: நீலகிரி, திருநெல்வேலி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலோர கர்நாடகா, கடலோர ஆந்திரா வழியாக சுமார் 4 கிமீ உயரத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (ஜூன் 8) முதல் 13-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் மாவட்டங்கள் மற்றும் கோவை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், 9-ம் தேதி தேனி, கன்னியாகுமரி, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோவை, தென்காசி, திருப்பூர், திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 86 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும். தென் தமிழக கடலோரப்பகுதிகள், வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் மணிக்கு அதிகபட்சம் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.
நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 6 செ.மீ., உபாசி, சோலையாறு, சின்கோனா, நீலகிரி மாவட்டம் பந்தலூர், விண்ட் ஒர்த் எஸ்டேட்டில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.