கோவை, மதுரை திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 2 நாள் கனமழை வாய்ப்பு

கோவை, மதுரை திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 2 நாள் கனமழை வாய்ப்பு
Updated on
2 min read

சென்னை: தமிழகத்தில் கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் நாளை (செப்.20) மற்றும் நாளை மறுதினம் (செப்.21) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடக்கு கடலோர ஆந்திரா முதல் மன்னார் வளைகுடா வரை, தமிழக பகுதிகள் வழியாக சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு வடக்கு - தெற்கு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளையும் (செப்.20), நாளை மறுதினமும் (செப்.21) நீலகிரி, கோவை, கடலூர், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

இந்த இரு தினங்களும் இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சிவகங்கை, ஈரோடு, ராமநாதபுரம், நாமக்கல், கரூர், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

22-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

23, 24 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (செப்.20) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி,நேமூரில் தலா 7 செமீ, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஆகிய இடங்களில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது.

கோவை, மதுரை திருச்சி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 2 நாள் கனமழை வாய்ப்பு
“மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது” - அமைச்சர் வன்னி அரசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in