

சென்னை: தமிழகத்தில் 3.38 லட்சம் பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் கருப்பைவாய் புற்று நோய் தடுப்பூசித் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைக்கவுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினம்-2025 நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்று எச்ஐவி-எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகள், விழிப்புணர்வு குறும்படத்துக்கான குறுந்தகடை வெளியிட்டார்.
மேலும், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, எச்ஐவி-எய்ட்ஸ் தடுப்பு மற்றும் சேவை பணியில் சிறந்து விளங்கிய மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள், மருத்துவர்கள், தன்னார்வலர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: இந்த ஆண்டுக்கான கருப்பொருள் ‘இடையூறுகளை கடந்து எச்ஐவி-எய்ட்ஸ் தொடர்பான எதிர்வினைகளை மாற்றுதல்’ ஆகும். 2030-க்குள் எச்ஐவி-எய்ட்ஸ் பாதிப்பு இல்லாத தமிழகத்தை உருவாக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக தமிழகத்தில் தொற்றின் தாக்கம் மிகவும் குறைந்துள்ளது. இந்தியாவின் எச்ஐவி பாதிப்பு 0.23 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழகத்தில் 0.16 சதவீதமாக உள்ளது.
தமிழகம்தான் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக 100 சதவீதம் கருவுற்ற தாய்மார்களுக்கு எச்ஐவி மற்றும் சிபிலிஸ் பரிசோதனைகள் செய்கிறது.
தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து, கல்வி மற்றும் மருத்துவ செலவுகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை என 7,618 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அடுத்த மாதம் தொடக்கம்: தமிழகத்தில் அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பள்ளிகளில் படிக்கும் 9 வயது முதல் 14 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் பாதிப்பு வராமல் தடுக்க தடுப்பூசி போடும் திட்டத்தை அடுத்த மாதம் முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளார்.
இத்திட்டத்தில் 3.38 லட்சம் பெண் குழந்தைகள் பயன்பெறுவார்கள். முதல் தவணையாக அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படவுள்ளது. இந்தியாவிலேயே தமிழகம்தான் முதல்முறையாக இந்த திட்டத்தை தொடங்குகிறது. இந்தியா முழுவதும் இந்த திட்டத்தை மத்தியஅரசு, கொண்டு வந்தால், ஒட்டுமொத்த பெண் குழந்தை களும் பலன் பெறுவார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சிமேயர் ஆர்.பிரியா, சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க திட்ட இயக்குநர் ஆர்.சீதாலட்சுமி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் சோமசுந்தரம், கூடுதல் இயக்குநர் திலகம் உள்ளிட்டோர் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.