ஷாருக்
சைபர் மோசடி கும்பலுக்கு உதவிய ஐ.டி ஊழியர் கைது: ரூ.9.80 லட்சம் பணம் மோசடி
சென்னை: ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.9.80 லட்சம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் பெங்களூரு ஐ.டி. ஊழியரை சென்னை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்த்தவர் சீனிவாசன்(38). தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக உள்ள இவர், கடந்த செப்.5-ம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அதில், “கடந்த 2024 ஜூன் 14-ம் தேதி முகநூல் பக்கத்தில் வந்த விளம்பரத்தை நம்பி அவர்கள் தெரிவித்தபடி, பங்குச் சந்தை பங்குகளில் முதலீடு செய்ய ஒப்புக் கொண்டேன். தொடர்ந்து அவர்கள் அனுப்பிய லிங்க்கில் பணம் அனுப்பினேன்.
இப்படி, பல்வேறு தவணைகளாக ரூ.9.80 லட்சம் அனுப்பினேன். ஆனால், எந்த லாபமும் கிடைக்கவில்லை. மேலும், எனது பணமும் திரும்பக் கிடைக்கவில்லை. எனவே, அந்த மோசடி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து சென்னை மேற்கு மண்டல சைபர் க்ரைம் போலீஸார் விசாரிக்க காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார். அதன்படி, போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
இதில், சைபர் க்ரைம் மோசடி கும்பலுடன் தொடர்பில் இருந்ததோடு, மோசடி பணம் தனது வங்கி கணக்குக்கு வர உதவிய பெங்களூருவைச் சேர்ந்த ஐ.டி நிறுவன ஊழியர் ஷாருக்(30) என்பவரை அங்கு சென்று சென்னை போலீஸார் கைது செய்தனர்.
இவர், பணப் பரிவர்த்தனைகளுக்கு ஏற்றவாறு சைபர் மோசடி கும்பலிடம் ரூ.2 லட்சத்துக்கு மேல் கமிஷன் பெற்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
