

சென்னை: சென்னை திரு.வி.க. நகரில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 350 மாணவிகளுக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தமிழகம் முழுவதும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக 14 வயது தொடங்கி 15 வயது பூர்த்தியடைவதற்கு முன்னதாக மாணவிகளுக்கு இலவசமாக ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ (ஹெச்பிவி) தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையொட்டி சென்னை மாநகராட்சியில் உள்ள 71 சென்னை பள்ளிகளில் பயிலும் 14 முதல் 15 வயதுக்குட்பட்ட 3,701 மாணவிகளுக்கு அவர்களது பெற்றோரின் ஒப்புதலுடன் ஹெச்பிவி தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக திரு.வி.க. நகர் மண்டலம், 71-வது வார்டுக்கு உட்பட்ட பாரதி சாலையில், அமைந்துள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில், எம்.எச்.சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 14 முதல் 15 வயதுக்குட்பட்ட 350 மாணவிகளுக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (ஹெச்.பி.வி) தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று நடைபெற்றன.
இதனை மாநகராட்சி இணை ஆணையர் க.கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் மாநகர மருத்துவ அலுவலர், கல்வி அலுவலர்கள், கூடுதல் மாநகர மருத்துவ அலுவலர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.