

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் மத்திய தொல்லியல் துறை ஆய்வுக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.
திருப்பரங்குன்றம் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கில் திருப்பரங்குன்றம் மலையை மத்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும், ஒரு ஆண்டுக்குள் ஆய்வை முடிக்க வேண்டும் என நீதிபதி எஸ்.ஸ்ரீமதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை நிறைவேற்றக் கோரியும், உயர் நீதிமன்ற உத்தரவுபடி திருப்பரங்குன்றம் மலையில் தொல்லியல் ஆய்வு நடத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி மதுரை கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில், ‘மத்திய தொல்லியல் துறை ஆய்வுக்கு தயாராக உள்ளது. மாநில வருவாய்த் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் ஆய்வு மேற்கொள்ள முடியாது. வருவாய் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை’ எனக் கூறப்பட்டது.
மனுதாரர் தரப்பில், ‘உச்ச நீதிமன்றத்திலும் மத்திய அரசு இதே பதிலைத் தான் வழங்கியது’ எனக் கூறப்பட்டது. தொடர்ந்து மத்திய அரசு தரப்பில், ‘இதே கோரிக்கையுடன் மனுதாரர் உச்ச நீதிமன்றத்திலும் மனுத் தாக்கல் செய்துள்ளார்’ எனக் கூறப்பட்டது.
அதற்கு மனுதாரர் தரப்பில், ‘திருப்பரங்குன்றம் கோயிலில் இருந்து அறநிலையத் துறையை வெளியேற்ற வேண்டும் என அங்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘திருப்பரங்குன்றம் மலையை மத்திய தொல்லியல்துறை கையகப்படுத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசும், மாநில அரசும் கூட்டு ஆய்வு நடத்தாமல் எதுவும் செய்யமுடியாது’ என்றனர்.
மத்திய அரசு தரப்பில், ‘மாநில வருவாய்த் துறையினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் 4-வது எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். அவர் மத்திய தொல்லியல் துறையுடன் கூட்டு ஆய்வு நடத்த வருவாய்த்துறை ஒத்துழைப்பு வழங்க உத்தரவிட வேண்டும். கூட்டு ஆய்வை மே மாதத்தில் முடிக்க வேண்டும். விசாரணை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது’ என உத்தரவிட்டனர்.