அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ விரைந்து விசாரிக்க வேண்டும்: பாமக நிர்வாகக் குழுவில் தீர்மானம்

அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ விரைந்து விசாரிக்க வேண்டும்: பாமக நிர்வாகக் குழுவில் தீர்மானம்
Updated on
2 min read

நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல் வழக்கு மற்றும் தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி செய்தது குறித்து சிபிஐ விரைந்து விசாரிக்க வேண்டும் என பாமக நிர்வாகக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் காந்தி, இணைப் பொதுச்செயலாளர் எம்எல்ஏ அருள் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ‘சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்து பேசுவதற்கு ராமதாஸுக்கு முழு அதிகாரம் அளிப்பது, தலையணை மந்திரத்தால் தலைக்கு பித்தம் ஏறி அலையும் அன்புமணி, தலையணை மந்திரத்தில் இருந்து முற்றிலும் விடுபடவில்லை என்றால் அவமானங்களையும், கேவலங்களையும் சந்திக்க நேரிடும் என எச்சரிப்பது, தம்பி மற்றும் சம்பந்தி என்ற உறவை விட அப்பா முக்கியம் என நினைத்து தந்தையை தலை நிமிரச் செய்துள்ள செயல் தலைவர் காந்திக்கு பாராட்டு மற்றும் நன்றி தெரிவிப்பது, நிலுவையில் உள்ள அன்புமணி மீதான ஊழல் வழக்கு மற்றும் தேர்தல் ஆணையத்தில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி செய்தது குறித்து சிபிஐ விரைந்து விசாரிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் கூறியதாவது: பாமக தலைவர் உட்பட பல்வேறு பதவிகளை அன்புமணிக்கு கொடுத்து அழகு பார்த்தோம். ஆனால் அவர், தீட்டிய மரத்தில் கூர் பார்க்கிறார். நான் கஷ்டப்பட்டு உருவாக்கிய பாமக எனும் ஆலமரத்தின் ஒரு கிளையில் கோடாரி செய்து, நுனி கிளையில் உட்கார்ந்து கொண்டு அந்த ஆலமரத்தை வெட்ட ஆரம்பித்து இருக்கிறார்.

டெல்லி உயர் நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கியும் கூட தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை வாங்குவது, ஊர்வலம் செல்வது, கூட்டம் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் அன்புமணி. என் பெயர், புகைப்படம் மற்றும் பாமக கொடியை அவர் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அன்புமணியின் செயலுக்கு நிர்வாகக் குழுவிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த பாமக நிர்வாகக் குழு, எனக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளது. இதேபோல் செயற்குழுவும், பொதுக்குழுவும் எனக்கு அதிகாரம் வழங்கும். நாங்கள் ஜனநாயக முறைப்படி கட்சியை நடத்தி வருகிறோம். பொய்யர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். கட்சிக்கும் உங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விபரீத விளையாட்டு வேண்டாம்.

போலி ஆவணங்களை கொடுத்து தேர்தல் ஆணையத்தை அன்புமணி ஏமாற்றி உள்ளார். இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் முதலில் தவறு செய்துள்ளது. டெல்லி உயர் நீதிமன்றம் எங்

களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி உள்ளது. தவறைப் புரிந்து கொண்ட தேர்தல் ஆணையம் பின்னர், சரியான தீர்ப்பை வழங்கி உள்ளது. இறுதி வெற்றி எங்களுக்குதான். தீர்ப்பு தெளிவாக இருப்பதால், சிவில் நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. பாமக-வின் சட்ட விதிகளின்படி, கட்சி என்னிடமே உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அன்புமணி மீதான ஊழல் வழக்கை சிபிஐ விரைந்து விசாரிக்க வேண்டும்: பாமக நிர்வாகக் குழுவில் தீர்மானம்
இலைக் கட்சியில் ‘மார்கழி’ சலசலப்பு | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in