

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் புதிய தேசிய தலைவர் முருகன் ஆர்.செல்வன். படம்: எல்.சீனிவாசன்
சென்னை: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசியத் தலைவர் முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சபரிமலைக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருவதால் சீசன் காலங்களில் அதிக நெரிசல் ஏற்படுகிறது. இதனால், ஐயப்பனை முறையாக தரிசிக்க முடியாமல் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்படுகிறது.
எனவே, ஒவ்வொரு பக்தரும் குறைந்தது 10 விநாடிகளாவது நின்று தரிசிக்கும் வகையில் கேரள அரசும், தேவசம் போர்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சபரிமலையில் சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதி, அவசர மருத்துவ வசதி இல்லாமல் குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை அவதிப்படுகின்றனர்.
இந்த அடிப்படை தேவைகளை உடனடி யாக பூர்த்தி செய்ய தேவசம் போர்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கத் திருட்டு வழக்கில் தொடர்புடைய அனைவரும் கட்டாயம் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். இது உலகெங்கும் உள்ள ஐயப்ப பக்தர்களின் முக்கியமான கோரிக்கையாகும். அதன்படி, தங்கத் திருட்டு வழக்கை நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரிப்பதற்கு உத்தரவிட கேரள காங்கிரஸ் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள் பலர் நீண்ட காலமாக சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆசையோடு காத்திருக்கின்றனர். சபரிமலைக்கு அவர்களை இலவசமாக அழைத்துச் செல்லும் யாத்திரை திட்டத்தை இந்து சமய அறநிலையத் துறை வகுக்க வேண்டும்.
சபரிமலைக்குச் செல்லும் வழியில் பல்வேறு கோயில்களுக்கும் பக்தர்கள் செல்கின்றனர். அங்கு சுவாமி தரிசனம் செய்ய பல மணி நேரம் காத்திருக்க வேண்டி உள்ளதால், அவர்கள் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க, அறநிலையத் துறை கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தனி வரிசை அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.