

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டைக் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்துக்கு வந்த குடும்பத்தினர். | படம்: நா.தங்கரத்தினம் |
மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 போலீஸாருக்கும் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என இறுதி வாதத்தில் சிபிஐ கேட்டுக்கொண்டுள்ளது.
ஜெயராஜ் மனைவி நீதிபதி முன்பு ஆஜராகி 9 பேருக்கும் அதிக பட்ச தண்டனை வழங்க வேண்டும் என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். இதையடுத்து தண்டனை ஏப். 6-ல் அறிவிக்கப்படும் என நீதிபதி தள்ளிவைத்தார்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான் குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர்.
கடந்த 2020 ஜூன் 19-ல் கரோனா ஊரடங்குக் கட்டுப்பாட்டு நேரம் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாக ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் சாத்தான்குளம் போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
பின்னர் காவல் நிலையத்தில் வைத்து இரவு முழுவதும் போலீஸார் தாக்கியதில் முதலில் பென்னிக்ஸ், அடுத்து ஜெயராஜ் உயிரிழந்தனர். இதையடுத்து சிபிஐ கொலை வழக்குப் பதிவு செய்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிந்து 9 பேரும் குற்றவாளிகள் என்றும் தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி முத்துக்குமரன் உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி முத்துக்குமரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேரையும் போலீஸார் ஆஜர்படுத்தினர்.
பின்னர் சிபிஐ வழக்கறிஞர் விஜயன் வாதிடுகையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். தூக்குத் தண்டனை, இரட்டை ஆயுள் போன்ற அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். அரிதினும் அரிதான காவல் கொடூர மரண வழக்குகளில் தூக்குத் தண்டனை வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
போலீஸாரின் செயல் மனித உரிமைக்கு எதிரானது. ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி இருவரையும் கொலை செய்துள்ளனர். காவல் மரணங்களில் நேரடிச் சாட்சிகள் இருக்க மாட்டார்கள். இந்த வழக்கில் 3 பேர் நேரடிச் சாட்சிகளாக உள்ளனர். எனவே 9 பேருக்கும் அதிகபட்ச தண்டனையாக தூக்குத் தண்டனை அல்லது இறக்கும் வரை சிறையில் இருக்கும் தண்டனை வழங்க வேண்டும், என்றார்.
குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டோரின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களின் வாதம்: குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் ஐந்தரை ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ளனர்.
குற்ற வழக்கில் ஒருவருக்கு தண்டனை வழங்கும்போது அவரின் குடும்பச் சூழல், உடல் நிலை, வயது, சிறையில் இருந்தது ஆகியவற்றை கவனத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜெயராஜை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றது வரை ஒன்றும் இல்லை. பென்னிக்ஸ் காவல் நிலையம் சென்ற பிறகுதான் அனைத்தும் நடந்துள்ளது. பென்னிக்ஸ் போலீஸாரை கோபப்படுத்தும் வகையில் நடந்துள்ளார். இதனால் போலீஸார் தாக்கியுள்ளனர். போலீஸார் உள்நோக்கத்துடன் செயல்படவில்லை.
உண்மையில் உள்நோக்கம் இருந்திருந்தால் இருவரின் உடலில் உள்ள முக்கியப் பாகங்களில் தாக்கியிருப்பார்கள். போலீஸாரின் செயல்பாடு மரணம் விளைவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இல்லை. அரிதினும், அரிதான வழக்குகளில் தூக்கு தண்டனை வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதே நேரம் ஏன் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும்? அது அவசியமா? என்பதைப் பரிசீலிக்க வேண்டும். ஒருவர் சமுதாயத்தில் வாழத் தகுதியற்றவர், அவரை இனிமேல் திருத்த முடியாது என்ற முடிவுக்கு வரும்போது தூக்குத் தண்டனை வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம். இந்த மரணங்கள் உள்நோக்கம் இல்லாமல் நிகழ்ந்தது. குற்றம்சாட்டப்பட்டோர் திருந்தி வாழும் வகையில் தண்டனை வழங்க வேண்டும், என்றனர்.
அதிகபட்ச தண்டனை தேவை
தண்டனை குறித்து ஜெயராஜின் மனைவி செல்வராணியிடம் நீதிபதி கருத்து கேட்டார். அதற்கு அவர் கண்ணீர் விட்டபடியே, என் கணவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரித்து விட்டு அனுப்பிவிடுவார்கள் என நினைத்தேன்.
நான் காவல் நிலையம் சென்று போலீஸாரின் காலில் விழுந்து இருவரையும் விட்டுவிடுமாறு கெஞ்சினேன். அதன் பிறகும் இருவரையும் விடவில்லை. இரவு முழுவதும் இருவரையும் கொடூரமாக தாக்கிக் கொலை செய்துள்ளனர்.
அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும், என்றார். இறுதி வாதம் முடிந்த நிலையில் ஏப்.6-ல் தண்டனை விவரம் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்து விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.