

சென்னை: ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சம்பவ இடத்துக்கே சென்று சிபிஐ அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர். அந்தவகையில் ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கின் முதற்கட்ட விசாரணை தீவிரமடைந்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் கே. ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ கையில் எடுத்து ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில், அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, சென்னை பெரம்பூரில் உள்ள வேணுகோபால் தெருவில் ஆர்ம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்பட்ட இடத்துக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று முன் தினம் நேரில் சென்றனர்.
டிஐஜி ரகுராம ராஜன் தலைமையிலான மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவினர், ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட போது அவர் கட்டிக்கொண்டிருந்த வீட்டைப் பார்வையிட்டதுடன், அங்கு நடந்த சம்பவங்களைக் காட்சிகளாக மறு உருவாக்கம் செய்து தீவிரமாக ஆய்வு செய்தனர்.
கொலை சம்பவம் எவ்வாறு அரங்கேறியது என்பது குறித்து அதிகாரிகள் விரிவாகப் பதிவு செய்து கொண்டனர். இந்த ஆய்வின் போது, ஆர்ம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட 2024 ஜூலை 5-ம் தேதி செம்பியம் காவல் நிலைய ஆய்வாளராகவும், வழக்கின் முந்தைய விசாரணை அதிகாரியாகவும் இருந்த சிரஞ்சீவியும் உடனிருந்தார்.
ஆர்ம்ஸ்ட்ராங்கின் சகோதரரும், கொலையை நேரில் பார்த்த சாட்சியுமான வீரமணி அளித்த புகாரின் அடிப்படையில், செம்பியம் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட அசல் முதல் தகவல் அறிக்கையை, சென்னை சிபிஐ சிறப்புப் பிரிவு தற்போது மீண்டும் பதிவு செய்து தனது அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டதுடன், சென்னை காவல்துறை தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை காவல் ஆணையர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், அந்த மனுவை காவல்துறை திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு முழு அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கைப் புதிய கோணத்தில் முழுவீச்சில் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.