

விசாரணைக்கு ஆஜராக வந்த பழநி கோயில் முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து.
திண்டுக்கல்: பழநி கோயில் நில மோசடி விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் பழநி கோயில் இணை ஆணையராகப் பணிபுரிந்து பதவி உயர்வில் சென்னை சென்ற மாரிமுத்து நேற்று சிபிசிஐடி எஸ்பி சாஜிதா முன்னிலையில் ஆஜரானார்.
பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம், ரூ.2 கோடிக்கு மோசடியாகப் பதிவு செய்யப்பட்டது குறித்து பழநி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் ச.முருகானந்தம் அளித்த புகாரில் திண்டுக்கல் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், அறக்கட்டளை பிரமுகர் முருகதாஸ் உள்ளிட்ட 4 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கினர்.
பழநியில் பிரச்சினைக்குரிய இடம் உள்ள பகுதி, பழநி பத்திரப்பதிவு அலுவலகம் ஆகிவற்றுக்குச் சென்று சிபிசிஐடி எஸ்பி சாஜிதா விசாரணை நடத்தினார். கடந்த வெள்ளிக்கிழமை திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் புகார்தாரர் முருகானந்தம் உள்ளிட்ட அறநிலையத் துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர் ஆகியோரிடம் விசாரணை தொடங்கியது.
இதைத் தொடர்ந்து திண்டுக்கல் ரவுண்ட்ரோடு பகுதியில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு சொந்தமான வீடு, நிலத்தை விற்ற விழுப்புரத்தில் உள்ள முருகதாஸ் வீடு ஆகியவற்றில் போலீஸார் சோதனை நடத்தினர்.
விசாரணையின் தொடர்ச்சியாக நேற்று திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடிஅலுவலகத்தில் பழநி கோயில் இணை ஆணையராகப் பணிபுரிந்து, பதவி உயர்வில் சென்னை சென்ற மாரிமுத்து விசாரணைக்கு ஆஜரானார்.
இவரை தொடர்ந்து பழநி கோயில் கண்காணிப்பாளர் முருகானந்தம், அறநிலையத் துறை ஆய்வாளர் சிவனேசன், கோயில் செயல் அலுவலர் கணபதி உள்ளிட்ட அறநிலையத்துறையில் பணிபுரியும் அலுவலர்களும் நேற்று ஆஜராகினர்.
பத்திரப்பதிவு செய்யப்பட்ட நிலம் குறித்து தங்களிடம் உள்ள ஆவணங்களை அறநிலையத்துறை ஊழியர்கள் விசாரணைக்கு எடுத்துச் சென்றனர். மேலும் வருவாய்த் துறையில் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்று, தற்போது பழநி கோயிலில் பணிபுரியும் மாரியப்பன், சின்னச்சாமி ஆகியோரிடமும் போலீஸார் விசாரித்தனர்.
இந்த விவகாரத்தில் போலீஸார் பல பிரிவுகளாகப் பிரிந்து பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்டவற்றில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்ட அறநிலையத் துறை அதிகாரிகளிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை நடந்தது. விசாரணை முடிந்து வெளியில் வந்த முன்னாள் இணை ஆணையர் மாரிமுத்து கூறும்போது, 1880 ஆண்டு முதல் நில ஆவணங்கள், மேலும் சில ஆவணங்களை சிபிசிஐடி போலீஸாரிடம் விசாரணைக்காக கொடுத்துள்ளோம் என்றார்.
நிலம் வாங்கியவர் முன்ஜாமீன் கோரி மனு
பழநி கோயிலுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடியாக பதிவு செய்தது தொடர்பான வழக்கில் உடுமலை பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். அதில் அவர், பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான 1.4 ஏக்கர்நிலத்தை மோசடியாக பதிவு செய்ததாக என் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தற்போது அந்தப் பத்திரப்பதிவு ரத்து
செய்யப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கிவருகிறேன். எனவே முன்ஜாமீன் தர வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ராஜசேகர் முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி மனுவில் சிபிசிஐடி போலீஸை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தார்.