

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
சென்னை: நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ. 4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கில் வலுவான ஆதாரங்கள் உள்ளதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது என சிபிசிஐடி போலீஸார் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2024-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தல் நேரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் நெல்லைக்கு கொண்டு செல்லப்பட்ட ரூ.4 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் தாம்பரம் ரயில் நிலையத்தில் வைத்து பறிமுதல் செய்தனர். அப்போது நெல்லை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அத்தொகுதி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக இந்தப் பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் மற்றும் பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்ட 13 பேர் மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஜார்ஜ் டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எஸ்.ஆர்.சேகர் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், ‘ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை விசாரணை நீதிமன்றம் கோப்புக்கு எடுத்து விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் அதை ரத்து செய்யும்படி கோர முடியாது.
இந்த வழக்கின் புலன் விசாரணையில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் எதிராகவும் வலுவான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த ஆதாரங்களை விசாரணை நீதிமன்றத்தின் விசாரணை மூலமாக மட்டுமே பரிசோதித்து ஆராய முடியும்.
ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளதால் இந்த வழக்கை ரத்து செய்யக் கூடாது,’எனக் கோரியிருந்தார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் ஆக.27-க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.