

புதுடெல்லி: காவிரியில் விகிதாச்சார அடிப்படையில் கர்நாடக அரசு நீர் திறப்பதை உறுதி செய்யவும், பற்றாக்குறை நீரை திறக்க உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது : தமிழகத்துக்கு இந்த ஆண்டு மிகவும் நெருக்கடியான நீர் ஆண்டாக உள்ளது, எனவே, கர்நாடகாவில் இருந்து பிலிகுண்டுலுவில் தமிழகத்துக்கு விகிதாசார அடிப்படையில் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் நீரை கர்நாடகா வழங்க உத்தரவிட வேண்டும். மேலும், கர்நாடக அணைகளில் போதிய நீர்வரத்து இருக்கும்போதோ அல்லது அணைகள் நிரம்பி வழியும்போது மட்டுமே காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதை அந்த மாநிலம் வாடிக்கையாக கொண்டுள்ளது. இது நீர் விவகாரத்தில் தமிழகத்துக்கு ஒரு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி உள்ளது.
எனவே, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தால் கடந்த ஜூலை 30, ஆகஸ்ட் 11, ஆகஸ்ட் 25 மற்றும் செப்டம்பர் 8 ஆகிய தேதிகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை கர்நாடக அரசு பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், நடப்பு 2026-27 பாசன ஆண்டில் விகிதாச்சார பங்கீட்டின்படி நீர் திறந்துவிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.