

கோப்புப் படம்
சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் தொடர்பான சோதனையில் இதுவரை ரூ.75 கோடி மதிப்பில் ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை வெளிப்படைத் தன்மையுடன் நடத்த, தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளுக்கும் 136 பொதுப் பார்வையாளர்கள், 40 காவல் பார்வையாளர்கள் மற்றும் 151 செலவினப் பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவர்களை பொதுமக்கள், அரசியல் கட்சிகள் எளிதில் தொடர்புகொள்ள, அவர்களின் தொடர்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்தல் செலவினக் கண்காணிப்பை உறுதி செய்யும் விதமாக மாநிலம் முழுவதும் கண்காணிப்பு மற்றும் அமலாக்கக் குழுக்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. இந்நிலையில். தமிழகம் முழுவதும் நேற்றைய (மார்ச் 21) நிலவரப்படி, ரூ.23.74 கோடி ரொக்கம், ரூ.51 லட்சம் மதிப்பில் மதுபானங்கள், ரூ.5.63 கோடி மதிப்பில் போதைப்பொருட்கள், ரூ.23.1 கோடி மதிப்பில் தங்கம், வெள்ளி பொருட்கள், ரூ.21.96 கோடி மதிப்பில் இலவசமாக வழங்க கொண்டு செல்லப்பட்ட இதர பொருட்கள் என மொத்தம் ரூ.75 கோடி மதிப்பில் ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணையவழி வேட்புமனு தாக்கல்,வேட்புமனு சமர்ப்பிப்பதற்கான நேர ஒதுக்கீடுகளை முன்பதிவு செய்தல், பொதுக் கூட்டங்கள், பேரணிகள் உள்ளிட்ட அனுமதிகளுக்கான விண்ணப்பங்கள் போன்ற தேர்தல் நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு வசதியளிக்கும் ஒரு விரிவான டிஜிட்டல் தளத்தை தேர்தல் ஆணையத்தின் சுவிதா இணையதளம் (http://suvidha.ecl.gov.in/) வழங்குகிறது.
விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் செயல்முறையை நிறைவு செய்த பிறகு, சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தின் அச்சுப் பிரதியை எடுத்து, தேவையான ஆவணங்களுடன் தேர்தல் அதிகாரியிடம் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த இணையதளம் வழியாக இதுவரை 2,443 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.