

சென்னை: அதிமுகவில் நிலவிய உள்கட்சி பிரச்சினை காரணமாக கடந்த 2022 ஜூலை 11 அன்று நடந்த அதிமுக பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், தங்களை அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்தும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி.
பிரபாகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில், தற்போது ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகியோர் திமுகவில் இணைந்து எம்எல்ஏ-க்களாக உள்ளனர்.
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தாங்கள் தொடர்ந்திருந்த வழக்குகளை வாபஸ் பெற அனுமதி கோரி அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில் தொடரப்பட்டிருந்த உரிமையியல் வழக்குகளை வாபஸ் பெற அனுமதித்து, வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டார்.
இதேபோல அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பயன்படுத்த தடை விதிக்கக்கோரி அதிமுக பொதுச் செயலாளரான பழனிசாமி தொடர்ந்திருந்த வழக்கையும் வாபஸ் பெற அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவையும் ஏற்ற நீதிபதி, அதையும் வாபஸ் பெற அனுமதித்து முடித்துவைத்தார். மேலும், ஜேசிடி பிரபாகர் தற்போது தவெகவில் இணைந்து சட்டப்பேரவைத் தலைவராக பதவி வகிக்கும் நிலையில் அவரும் தனது தரப்பில் அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரியிருந்தார். அந்த மனுவையும் ஏற்ற நீதிபதி, வழக்கை வாபஸ் பெற அனுமதித்து முடித்து வைத்தார்.