

சென்னை: அண்ணா சாலை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர், கொள்முதல் உட்பட முக்கிய ஆவணங்கள் அடங்கிய 34 ஹார்டு டிஸ்க் காணாமல் போனதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதுகுறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதல்கட்டமாக அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் காவல் துறை விசாரணைக்குள் கொண்டுவரப்பட்டனர்.
இதில், ஹார்டு டிஸ்க்குகளை திருடியது, அங்கு ஒப்பந்த முறையில் பணியாற்றிய ஊழியரான ராயப்பேட்டையைச் சேர்ந்த கோபிநாத் (41) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர். அவரது வாக்கு மூலத்தின் அடிப்படையில் மேலும் ஒருவரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனைத்தும் மீட்பு
மின்வாரியத்தின் முக்கிய தகவல்கள் அடங்கியுள்ள ஹார்டு டிஸ்க் என்பதால், அவற்றை திருட லட்சக்கணக்கில் பணம் கைமாறி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதன் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிந்து அவர்களை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், திருடுபோன அனைத்து ஹார்டு டிஸ்க்குகளும் மீட்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
இதில் அடுத்தகட்ட நடவடிக்கைகள், துறைரீதியான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மின்வாரிய அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மின்வாரிய தலைமை அலுவலகத்தின் வெவ்வேறு பிரிவுகள், தளங்களில் இருந்து 34 ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளன.
கைதானவர்கள் அவற்றை பெங்களூருவுக்கு கொண்டு சென்றதால், அங்கு சென்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். சில ஊழியர்களுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. சிசிடிவி ஆதாரங்களை வைத்து விசாரணை நடப்பதால் யாரும் தப்ப முடியாது.
கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற டெண்டர்கள், நிலக்கரி கொள்முதல், சோலார் திட்டங்களுக்கான அனுமதி ஆவணங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. திருடப்பட்ட தரவுகளின் கூடுதல் நகல்கள் இருப்பதால் அவற்றை மீட்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி காலத்தில் டிரான்ஸ் ஃபார்மர் கொள்முதலில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்குகள் ஏற்கெனவே சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மின்வாரியத்தில் இனி தவறு நடக்காதவாறு டெண்டர் பாலிசி கடந்த வாரம் மாற்றப்பட்டுள்ளது.
இனிமேல் சந்தை விலை, உற்பத்தியாளர் விலை மதிப்பீடு ஆகியவற்றின் அடிப்படையில் வெளிப்படையாக டெண்டர் விலை நிர்ணயிக்கப்படும். முந்தைய ஆட்சியில் வாங்கப்பட்ட தரம் குறைந்த நிலக்கரியால் அனல்மின் நிலையங்களில் முழு உற்பத்தி செய்ய முடியவில்லை.
கடந்த 2 நாட்களாக காற்றாலை மின் உற்பத்தி குறைந்ததே தற்போதைய நெருக்கடிக்கு காரணம். அதை சரிசெய்ய நீண்ட கால ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு சில வாரங்களில் அனைத்தும் முழுமையாக சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.