மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலையில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேருக்கும் விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்தக் கோரிய வழக்கில், அனைவரும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், கரோனா ஊரடங்கு அமலில் இருந்த காலகட்டத்தில் 2020 ஜூன் 19-ல் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, சிபிஐ கொலை வழக்குப் பதிவு செய்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
சிபிஐ மனுதாக்கல்
இந்த வழக்கை, மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிந்த நிலையில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேருக்கும் தூக்குத் தண்டன விதித்து, ஏப்ரல் 6-ம் தேதி நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த தூக்குத் தண்டனையை உறுதி செய்யக் கோரி, தமிழக அரசு மற்றும் சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், ராம கிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. ஸ்ரீதர் உள்பட 9 பேரும் மதுரை மத்திய சிறையில் இருந்த நிலையில், காணொலி மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அவர்களிடம் நீதிபதிகள், சாத்தான்குளம் வழக்கில் விசாரணை நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்த சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.
அதற்கு ஸ்ரீதர் தரப்பு வழக்கறிஞர், வழக்கு தொடர்பான உரிய ஆவணங்களை சிபிஐ அளிக்கவில்லை எனக் கூறினார். பின்னர் நீதிபதிகள், உத்தரவு நகலை வைத்து முதலில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யுங்கள், அதன் பிறகு உரிய ஆவணங்கள் வழங்கப்படும். மேலும், சிபிஐ தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கூறி, விசாரணையை தள்ளிவைத்தனர்.