

மதுரை: தமிழக சிறைகளில் கைதிகள் தொலைபேசியில் பேசுவதற்கான கட்டணத்தை குறைக்கக் கோரிய வழக்கில் சிறைத் துறை டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை கோ.புதூரைச் சேர்ந்த ராஜா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: சிறைகளில் கைதிகள் உறவினர்கள், வழக்கறிஞர்களுடன் தொலைபேசியில் பேசும் வசதி உள்ளது. இந்த சேவைக்கு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறைக் கைதிகளின் ஊதியத்திலிருந்து தொலைபேசி கட்டணம் கழிக்கப்படுகிறது. இதற்காக சிறைகளில் குரல் மற்றும் காணொலி அழைப்பு வசதிகளுடன் தொலைபேசி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
சிறை கைதிகளுக்கு தற்போது மாதம் 10 முறை மற்றும் 120 நிமிடங்கள் வரை பேசலாம் என உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வசதிக்கு ஒவ்வொரு 10 நிமிட அழைப்புக்கும் சுமார் ரூ.28 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் மாதம் ரூ.280 செலவிட வேண்டியதுள்ளது.
சிறைக்கு வெளியே ரூ.200 முதல் ரூ.350-க்கு வரம்பற்ற குரல் அழைப்புகள், இணையதள, குறுந்தகவல் வசதி கிடைக்கிறது. இதை ஒப்பிடுகையில் சிறைக்குள் தொலைபேசி வசதிக்கு பல மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் சிறைகளில் கைதிகளிடம் வசூலிக்கப்படும் தொலைபேசி கட்டணத்தைக் குறைத்து, சந்தை கட்டணத்துக்கு ஏற்ப நியாயமான கட்டணம் நிர்ணயிக்கவும், சிறைகளில் ஏழைகள், முதியோர், மனநலம் பாதிக்கப்பட்டோர், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச தொலைபேசி வசதி வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. பின்னர் நீதிபதிகள், சிறையில் தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனத்தை எதிர்மனுதாரராக சேர்த்தும், மனுதொடர்பாக சிறைத்துறை டிஜிபி மற்றும் தொலைபேசி நிறுவனம் சார்பில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.