

இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனைகள்
மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, வங்கதேசத்துடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு நடைபெறுகிறது.
லீக் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. நிகார் சுல்தானா தலைமையிலான வங்கதேச அணி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
இரண்டாவது சுற்றில் மாயா தோல்வி
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஜூனியர்களுக்கான சிறுமிகள் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி, ரஷ்யாவின் அரினா லிகினாவை எதிர்த்து விளையாடினார். இதில் மாயா 3-6, 7-5, 5-7 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 16 நிமிடங்கள் நடைபெற்றது.
நமீபியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா - நமீபியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று நமீபியாவில் உள்ள விண்ட்ஹோக் நகரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 348 ரன்கள் குவித்தது. ஜோர்டான் ஹெர்மான் 126 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகளுடன் 150 ரன்கள் விளாசினார்.
மழை காரணமாக நமீபியா அணிக்கு 31 ஓவர்களில் 262 ரன்கள் சேர்க்க வேண்டும் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அந்த அணியால் 31 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. அதிகபட்சமாக மலான் க்ரூகர் 34, ஜேஜே ஸ்மித் 31 ரன்கள் சேர்த்தனர். டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்தியா ‘ஏ’ அணியில் ஹர்திக் பாண்டியா
ஆஸ்திரேலியா ‘ஏ’ கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இந்தியா ‘ஏ‘ அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரையும், 2-வது டெஸ்ட் 29-ம் தேதி முதல் அக்டோபர் 2 வரையும் புதுச்சேரியில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டி அக்டோபர் 6, 9, 11-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
இந்த தொடர்களுக்கான இந்தியா ‘ஏ’ அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஒருநாள் போட்டிக்கான அணியில் சீனியர் ஆல்ரவுண்டரான 32 வயதாகும் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோன்று டெஸ்ட அணியில் காயத்தில் இருந்து குணமடைந்துள்ள சாய் சுதர்சன் இடம் பெற்றுள்ளார்.
அரையிறுதியில் ஜூனியர் ஹாக்கி அணி
ஆசிய கோப்பை ஜூனியர் ஹாக்கி சீனாவின் மோகி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று சீன தைபேவுடன் மோதியது. இந்த மோதலில் இந்திய அணி 15-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 5 முறை சாம்பியனான இந்திய அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது.
இதன் மூலம் ‘ஏ’ பிரிவில் இந்திய அணி 3 வெற்றி, ஒரு டிராவுடன் 10 புள்ளிகளை முதலிடம் பிடித்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்திய அணி தரப்பில் கேப்டன் அன்மோல் 6 கோல்கள் (25, 29, 32, 33, 45, 51-வது நிமிடங்கள்) அடித்து அசத்தினார். ஆர்யன் 3 கோல்களும் (17, 52, 53-வது நிமிடங்கள்), ஹர்பால் 2 கோல்களும் (48, 53-வது நிமிடங்கள்), பிரப்தீப் சிங் (18-வது நிமிடம்), குருசேவக் சிங் (22-வது நிமிடம்), அர்ஜுன் சந்தோஷ் ஹர்குடே (28-வது நிமிடம்), அஜீத் (35-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர்.