சென்னை: தவெகவில் இணைந்த 3 அதிமுக எம்எல்ஏ-க்களின் ராஜினாமாவை ஏற்று பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது.
இந்நிலையில் கடந்த மே 13 அன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அவர்கள் மீது கட்சித்தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் சட்டப்பேரவைத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த 25 பேரில் அதிமுக எம்எல்ஏ-க்களான மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.
அவர்களின் ராஜினாமா கடிதங்களை பேரவைத் தலைவர் ஏற்றதை அடுத்து, அது தொடர்பான அறிவிப்பு அரசிதழிலும் வெளியிடப்பட்டது. தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ள நிலையில் அதிமுக எம்எல்ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டது சட்டப்படி தவறு எனக்கூறி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரான வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், ``கட்சி கொறடா உத்தரவை மீறி சட்டப்பேரவையில் வாக்களித்ததால் தகுதி நீக்கம் தொடர்பான நடவடிக்கை நிலுவையில் இருந்து வரும் நிலையில், அதைத் தவிர்க்கும் விதமாக சம்பந்தப்பட்ட எம்எல்ஏ தனது பதவியை ராஜினாமா செய்ய முடியுமா என்பது குறித்தும், அதை ஏற்க முடியுமா என்பது குறித்தும் அரசியல் சாசன சட்டரீதியாக கேள்வி எழுந்துள்ளது.
பேரவைத் தலைவர் சம்பந்தப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டது கட்சித்தாவல் தடைச்சட்டத்தையும், மக்கள் தீர்ப்பையும் நீர்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளது.
கட்சித்தாவல், ராஜினாமா காரணமாக அடுத்தடுத்து தேர்தல்கள் நடத்த வேண்டியுள்ளதால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும். எனவே 3 அதிமுக எம்எல்ஏ-க்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்று பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி அதிமுக தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.