சைபர் குற்றங்கள் குறித்து எளிதாக புகார் அளிக்க உரிய வழிகாட்டுதலை உருவாக்க கோரி வழக்கு

மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சைபர் குற்றங்கள் குறித்து எளிதாக புகார் அளிக்க உரிய வழிகாட்டுதலை உருவாக்க கோரி வழக்கு
Updated on
1 min read

மதுரை: இணையவழிக் குற்றங்கள் தொடர்பாக எளிதாக புகார் அளிக்க உரிய வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்த வகுலகிரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவின் விவரம்: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர் ஒருவரின் செல்போன் எண்ணுக்கு ஜூன் 24-ம் தேதி கூரியர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கூரியர் வந்திருப்பதாகவும், தான் சொல்லும் எண்களை பதிவிடுமாறும் தெரிவித்துள்ளார்.

அந்த எண்களை பதிவிட்டதும் பெண் ஊழியரின் வாட்ஸ் அப் கணக்கு முடக்கப்பட்டது. அவரது செல்போனில் இருந்து வேறு யாருக்கும் அழைப்பு விடுக்கவும், அவரை யாரும் அழைக்கவும் முடியாமல் போனது.

அதேநேரத்தில் அவரது செல்போன் எண்ணில் இருந்து அவரது செல்போனில் உள்ள தொடர்பு எண்களுக்கு வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் சென்றுள்ளது. அதில், தான் இக்கட்டான சூழலில் இருப்பதாகவும், அவசரமாக தனக்கு ரூ.45 ஆயிரத்தை தனது எண்ணுக்கு செயலி மூலம் அனுப்பி வைக்குமாறும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த குறுந்தகவல் சென்றடைந்ததும் பெண் ஊழியரின் நண்பர்கள், உறவினர்கள் என்ன பிரச்சினை என விசாரிக்க அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது, தொடர்பு கொள்ள முடியவில்லை. இது மோசடிபோல் இருப்பதாக அறிந்து கொண்ட சிலர், அந்த பெண் ஊழியரை அவரது நெருங்கிய நண்பர்கள் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.

இது குறித்து அறிந்த பெண் ஊழியர் உடனடியாக சைபர் கிரைம் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டார். அவரால் எளிதாக புகாரை பதிவு செய்ய முடியவில்லை. இணைப்பு துண்டிக்கப்பட்டு கொண்டே இருந்தது.

பின்னர் இணையதளம் வழியாக சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்க முயன்றார். அதிலும் எளிதாக புகாரை பதிவு செய்ய முடியவில்லை. சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்கவே 6 மணி நேரம் ஆனதால் பெண் ஊழியர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

தமிழகம் முழுவதும் இணையவழி குற்றங்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக உடனடியாக புகார் அளிக்க வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது.

எனவே, யுபிஐ பணப்பரிவர்த்தனை மோசடி உள்ளிட்ட இணைய வழிக் குற்றங்கள் தொடர்பாக எளிதில் புகார் அளிப்பதற்கு உரிய வழிகாட்டுதல்களை உருவாக்கவும், புகார்களை சுலபமாக பதிவு செய்யும் வகையிலும் இணையதளத்தை மேம்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு விசாரித்தது. பின்னர் மனு தொடர்பாக மத்திய, மாநில அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

சைபர் குற்றங்கள் குறித்து எளிதாக புகார் அளிக்க உரிய வழிகாட்டுதலை உருவாக்க கோரி வழக்கு
Lava Smart 4 Plus ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in