மதுரை: தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் விதிகளில் மாற்றம் செய்யக் கோரிய வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என மதுரை அமர்வு தெரிவித்தது.
தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல்கள் அடுத்தடுத்து நடைபெறவுள்ளன. இந்தத் தேர்தகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் வெற்றிக்காக ஓட்டுக்கு பணம் தருவதாக தொடர்ந்து புகார்கள் இருந்து வருகின்றன.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தேர்தலில் வாக்காளர்களுக்கு வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் விதிகளில் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்.
அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்துக்காக குழந்தைகள், பெண்களை வெயிலில் நீண்ட நேரம் காத்திருக்க செய்வதை தடுக்க உத்தரவிட வேண்டும்.
தேர்தலையொட்டி கருப்பு பணம் மற்றும் போதைப்பொருளை பயன்படுத்துவது, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை தடுக்க சிறப்பு கவனம் செலுத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, தலைமை நீதிபதி அமர்வில் அவரது வழக்கறிஞர் முறையீடு செய்தார். அதற்கு நீதிபதிகள், தேர்தல் தொடர்பான இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படும் என தெரிவித்தனர்.