

ராயக்கோட்டை காவல் நிலையத்தில் திமுக நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்தது தொடர்பாக திமுகவினர் விளக்கம் கேட்டனர்.
கிருஷ்ணகிரி: தமிழக முதல்வர் விஜய் குறித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக, ராயக்கோட்டையை சேர்ந்த திமுக நிர்வாகி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அடுத்த உடையாண்டஹள்ளி அருகே போடம்பட்டியை சேர்ந்தவர் அரியப்பன். திமுக விவசாய அணி மாநில துணை செயலாளராக உள்ளார். இவரது மகன் அன்பானந்தம் (30). இவர் திமுக ஜென்ஸீ பிரிவின் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராக உள்ளார்.
இந்நிலையில், தனது சமூக வலைதள பக்கங்களில், தமிழக முதல்வர் குறித்து வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார்.
அந்த வீடியோவில், முதல்வர் விஜய் தொடர்பாகவும், பெண்களை அவமதிக்கும் வகையில் அன்பானந்தம் பேசியதாக, கெலமங்கலம் தவெக கிழக்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி (37) என்பவர் ராயக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, பெண்கள் மரியாதையை குலைக்கும் வகையில் அவதூறு பேசி, அரசுக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் திட்டமிட்டு கருத்துகளை வெளியிட்டு, தவறான தகவல்களை பரப்பி, பொது அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்தி மிரட்டல் விடுப்பதாக, அன்பானந்தம் மீது, ராயக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
தொடர்ந்து, தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி ஆனந்தராஜ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸார், நள்ளிரவு 2 மணியளவில் அன்பானந்தத்தை கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்று சோதனை செய்தனர். அவரது தந்தை அரியப்பன் மற்றும் வேப்பனப்பள்ளி திமுக எம்எல்ஏ சீனிவாசன் ஆகியோர், வாரன்ட் இல்லாமல் நள்ளிரவில் வந்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பியதால் போலீஸார் அங்கிருந்து சென்றனர்.
இதன் பின்னர் காலை 10 மணியளவில், மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஒய்.பிரகாஷ் தலைமையில் எம்எல்ஏ பி.எஸ்.சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏ முருகன் மற்றும் கட்சியினர், டிஎஸ்பி ஆனந்தராஜிடம் பேசினர்.
அப்போது, சிறிய விஷயத்துக்காக நள்ளிரவில் அன்பானந்தத்தை கைது செய்வதற்காக சென்றது ஏன் என கேள்வி எழுப்பினர்.
மேலும், தவெக அரசை கேள்வி கேட்டால் கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் தொடர்ந்து ஈடுப்பட்டால் போராட்டங்கள் நடத்தப்படும் எனத் தெரிவித்தனர்.