ரூ.50 கோடி மதிப்பிலான ஸ்ரீரங்கம் கோயில் சொத்து அபகரிப்பு புகார் - திமுக நிர்வாகி மீது வழக்குப் பதிவு

அபகரிக்கப்பட்ட வீடு மற்றும் திமுக நிர்வாகி ராம்குமார்

அபகரிக்கப்பட்ட வீடு மற்றும் திமுக நிர்வாகி ராம்குமார்

Updated on
2 min read

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்புடைய சொத்தை போலி ஆவணங்களை கொண்டு அபகரித்து கொண்டதாக திமுக பகுதிச் செயலாளர் உள்ளிட்ட 6 பேர் மீது மாநகர குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருச்சி திருவானைக்காவல் விக்னேஷ்வரா குடியிருப்பு பகுதியில் வசிப்பவர் என்.ராம்குமார். ஸ்ரீரங்கம் பகுதி திமுக செயலாளராக உள்ளார். இவரது மனைவி ஆண்டாள், திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் மண்டலக்குழு தலைவராக உள்ளார்.

இந்நிலையில், ராம்குமார் ஸ்ரீரங்கம் காந்தி சாலையில் உள்ள ரூ.50 கோடி மதிப்புடைய பங்களாவுடன் கூடிய கோயில் சொத்தை போலியாக ஆவணம் தயாரித்து அபகரித்து கொண்டதாக ஸ்ரீரங்கம் கோயில் ஆணையர் சிவராம்குமார், மாநகர குற்றப் பிரிவு போலீஸில் கடந்த செப்.10-ம் தேதி புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் விவரம்: ஸ்ரீரங்கம் காந்தி சாலையில், 7,515 சதுர அடி பரப்பளவு கொண்ட பங்களாவுடன் கூடிய இடத்தை ரூ.1.45 கோடி பணத்தைப் பெற்றுக்கொண்டு கோயிலுக்கு சொந்தமான இடத்தில், இல்லாத உரிமையை இருப்பதாகக் கூறி கடந்த 2022 டிச.5-ம் தேதி ஸ்ரீரங்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ராம்குமார் பத்திரப் பதிவு செய்துள்ளார்.

முன்னதாக, இந்த இடத்தின் உரிமையாளர்கள் என்று சென்னை நங்கநல்லூரில் வசிக்கும் ரங்கராஜன் மனைவி பத்மஜா, பெங்களுருவில் வசிக்கும் கிருஷ்ணசாமி மனைவி விஜயா, இவர்களின் சகோதரர்கள் சென்னை கோடம்பாக்கம் அசோக் அவென்யூவை சேர்ந்த சவுந்தரராஜன், புதுச்சேரி லாஸ்பேட்டை குமரன் நகரை வெங்கடவரதன் ஆகியோர் மோசடியான ஆவணங்கள் மூலம் முறைகேடாக கிரைய ஆவணம் பதிவு செய்துள்ளனர்.

இதற்கு அப்போதைய ஸ்ரீரங்கம் சார்பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளார்.

எனவே, ஸ்ரீரங்கம் திமுக பகுதி செயலாளராக கட்சி பொறுப்பில் இருந்துகொண்டு, அதனை தவறாக பயன்படுத்திய ராம்குமார் மீதும், திட்டமிட்டு கோயில் சொத்தை அபகரிக்க வேண்டுமென்ற கெட்ட எண்ணத்தில் கூட்டுச் சதி செய்து மோசடியான ஆவணங்களை உருவாக்கிய மற்ற 4 பேரின் மீதும், மேற்படி சொத்து கோயிலுக்கு பாத்தியப்பட்டது என்பதால் எவ்வித பதிவும் மேற்கொள்ள வேண்டாம் என்று உரிய சட்டபூர்வமான அறிவிப்புகள் அனுப்பியிருந்ததை பெற்றுக் கொண்டும் மோசடிக்கு துணை போன சார்பதிவாளர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் பேரில் மாநகர குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் கே.சண்முகவேல், 420 உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் திமுக பகுதிச் செயலாளர் ராம்குமார் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னாள் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபுக்கு நெருக்கமானவராக அறியப்படும் திமுக பகுதிச் செயலாளர் ராம்குமார் மீது ரூ.50 கோடி மதிப்புடைய கோயில் சொத்தை அபகரித்துள்ளதாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்ட சம்பவம், திருச்சி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

<div class="paragraphs"><p>அபகரிக்கப்பட்ட வீடு மற்றும் திமுக நிர்வாகி ராம்குமார்</p></div>
“மாணவர் பாரதிதாசன் விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது” - அமைச்சர் வன்னி அரசு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in