

திருவள்ளூர்: ஆர்.கே.பேட்டை, கொண்டாபுரம் அரசு பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து, 7-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட முதன்மை கல்வி ஆலுவலர் ஆகிய 3 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவரின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.1 கோடி, அரசு பணி வழங்கக் கோரி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆர். கே.பேட்டை அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில், நேற்று முன்தினம் மதிய உணவு இடைவேளையின் போது, 7-ம் வகுப்பு மாணவரான சரத்குமார் மகன் மோகித் (11), பள்ளி நடைமேடை பகுதியில் சத்துணவு அருந்தி கொண்டிருந்த போது, கைப்பிடிச் சுவர் இடிந்து, மோகித் மீது விழுந்தது. இதில், படுகாயமடைந்த மோகித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, ஆர்.கே.பேட்டை போலீஸார், பள்ளி தலைமையாசியர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர் அமுதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் ஆகிய 3பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, உயிரிழந்த மாணவரின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.1 கோடி மற்றும் அரசு பணி வழங்க கோரி, திருத்தணி அரசு மருத்துவமனையில் மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்குட்படுத்த, பெற்றோர், உறவினர்கள் மறுத்து, நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
நேற்று மதியத்துக்கு மேல் நீடித்த வண்ணம் இருந்த இந்த போராட்டத்தில், மாணவரின் பெற்றோர், உறவினர்கள் மட்டுமல்லாமல், பகுஜன் சமாஜ் கட்சி, புரட்சி பாரதம், விசிக, தவெக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து, தகவலறிந்த அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் பிரதாப் போராட்டத்தில் ஈடுபட்டோரை சமாதானப்படுத்த முயன்றும் பயனில்லை. இதையடுத்து, அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர், திருத்தணி எம்எல்ஏ சந்திரன் உள்ளிட்டோர், திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாணவனின் பெற்றோர், அரசியல் கட்சி நிர்வாகி களிடம் பேச்சு நடத்தினர்.
ரூ.10 லட்சம் நிவாரணம்: அதில், மாணவரின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் மற்றும் எம்எல்ஏக்கள் நிதி ரூ.5 லட்சம் என, ரூ.10 லட்சம் வழங்கவும், ஒப்பந்த அடிப்படையில் ஆர். கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் பணியும் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.
அதன் படி, மாணவரின் தந்தை சரத்குமாரிடம் ரூ.10 லட்சம் மற்றும் பணி நியமன ஆணையை அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார். இதையடுத்து, சுமார் 15 மணி நேரத்துக்கு மேல் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்து, நேற்று மாலை மாணவர் மோகித்தின் உடல் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.