தவெக எம்எல்ஏ.விடம் பேரம் பேசிய வழக்கு: இதுவரை 14 பேர் கைது; ரூ.4.5 கோடி பறிமுதல்

மேலும் 3 பேரிடம் தீவிர விசாரணை
தவெக எம்எல்ஏ.விடம் பேரம் பேசிய வழக்கு: இதுவரை 14 பேர் கைது; ரூ.4.5 கோடி பறிமுதல்
Updated on
2 min read

சென்னை: தவெக எம்எல்ஏ.விடம் பேரம் பேசிய வழக்கு தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பேரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதுவரை ரூ.4.5 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை வாக்கெடுப்பில் தவெக நிலைப்பாட்டுக்கு மாறாக வாக்களிக்க ரூ.35 கோடி லஞ்சம் தருவதாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபர் திருநாவுக்கரசு உள்ளிட்ட சிலர் பேரம் பேசியதாகவும், மறுத்ததால் தனக்கும், குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா, திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், ‘மேகாலயா புராஜெக்ட்’ என்ற பெயரில் 15 தவெக எம்எல்ஏ.க்களை பெரும் தொகை கொடுத்து விலைக்கு வாங்கி ஆட்சியின் நிலைத்தன்மையை சீர்குலைக்க திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் யூடியூபர் திருநாவுக்கரசு, நரேஷ் உள்ளிட்ட 14 பேரை போலீஸார் அடுத்தடுத்து கைது செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோர் இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்றுள்ளனர்.

மேலும், தனியார் தொலைக்காட்சி நெறியாளர் ஒருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டதுடன், அவரது செல்போனும் சைபர் தடயவியல் ஆய்வுக்காக கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்டவர் களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், எம்எல்ஏ.க்களுக்கு வழங்கப்பட இருந்த முன்பணத்தின் ஒரு பகுதி சென்னை சூளைமேட்டில் உள்ள ‘தீபம் ஃபைனான்ஸ்’ நிறுவனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 17-ம் தேதி அங்கு சோதனை நடத்திய போலீஸார், கணக்கில் காட்டப்படாத ரூ.2 கோடியே 82 லட்சத்து 49 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அந்த நிறுவனத்தை நடத்தி வந்த கருணாநிதி, சரவணன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

மதுரையைச் சேர்ந்த 3

பேர் இதற்கிடையே, மதுரையைச் சேர்ந்த ரங்கராஜன் உள்ளிட்ட 3 பேரை திருவல்லிக்கேணி போலீஸார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து ரூ.56 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அவர்கள் மதுரையில் செயல்படும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் என்பதும், இந்த நிறுவன ஊழியர்களுக்கும் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட சென்னை சூளைமேடு ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை மொத்தம் ரூ.4.5 கோடி வரை ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பணம் ஹவாலா மூலம் கொண்டு வரப்பட்டதா, நிதி நிறுவனங்கள் வழியாக இடைத்தரகர்களுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங் களில் விசாரணை நடக்கிறது.

இந்த வழக்கில் மேலும் சில முக்கிய நபர்கள் சிக்கக்கூடும் என்பதால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக எம்எல்ஏ.விடம் பேரம் பேசிய வழக்கு: இதுவரை 14 பேர் கைது; ரூ.4.5 கோடி பறிமுதல்
காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்துக்குரிய பங்கு நீரை பெற நடவடிக்கை: முதல்வர் விஜய்க்கு பழனிசாமி கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in