வருமானத்துக்கு அதிகமாக ரூ.81.42 லட்சம் சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் மகன் உள்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை உறுதி

வருமானத்துக்கு அதிகமாக ரூ.81.42 லட்சம் சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் மகன் உள்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை உறுதி
Updated on
1 min read

சென்னை: மறைந்த முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவரது மகன் எஸ்.பன்னீர்செல்வம் உள்பட 4 பேருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் மருங்காபுரி தொகுதி திமுக எம்எல்ஏவாகவும், கால்நடைத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் பி.எம்.செங்குட்டுவன். 2001-க்குப் பிறகு அதிமுகவில் இணைந்தார்.

திமுக ஆட்சி காலத்தில் அமைச் சராகப் பதவி வகித்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.81 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக செங்குட்டுவன், அவரது மகன்கள் எஸ்.பன்னீர்செல்வம், சக்தி வேல், மகள் மீனாட்சி, மருமகன் ராஜலிங்கம், சகோதரரின் மகள் வள்ளி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கை திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் மற்றும் அவரது மருமகன் ராஜலிங்கம் ஆகியோர் இறந்துவிட்டதால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிட்டது.

மேலும், செங்குட்டுவனின் மகன்கள், மகள் மற்றும் சகோதரர் மகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து கடந்த 2023 அக்டோபரில் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து பன்னீர் செல்வம் உள்பட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக ரூ.81.42 லட்சம் சொத்து குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் மகன் உள்பட 4 பேருக்கு 3 ஆண்டு சிறை உறுதி
தமிழகத்தில் மனை, அடுக்குமாடி குடியிருப்புகளின் முதல் விற்பனையில் இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in