

சென்னை: தமிழகத்தில் மனை, அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளுக்கான முதல் விற்பனை பதிவுக்கு இணையவழியில் வருகையில்லா ஆவணப்பதிவு கட்டாயமாக்கல் நடைமுறையை முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார்.
பதிவு நடைமுறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேலும் மேம்படுத்தவும், பொதுமக்களுக்கு எளிதான சேவையை வழங்கவும் நேரில் வருகையற்ற பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள், சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே மனை அல்லது அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டின் முதல் விற்பனையை தற்போது பதிவு செய்யலாம். இப்புதிய முறையில் பதிவுத்துறை இணையதளத்தில் தங்களது உள்நுழைவினைத் தாங்களே உருவாக்கி ஆவணங்களை இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.
அதன்பின் ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகளின் ஆதார் அட்டை பதிவேற்றப்பட வேண்டும். ஆதார் ஆணையத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழிப் படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.
இதற்கு, இணைய இணைப்பு, ஆதார் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட எல்1 விரல் ரேகை இயந்திரம் மற்றும் கருவிழிப்படலம் ஸ்கேன் செய்யும் கருவி, புகைப்படம் எடுக்க, எடுப்பவரின் பின்புறத்தில் வைக்க தேவைப்படும் நீலத்திரை, புகைப்படக் கருவி ஆகிய தொழில்நுட்ப உபகரணங்கள் தேவைப்படும்.
வருகையில்லா ஆவணப்பதிவின் மூலம் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சார்பதிவாளர்கள் 24 மணி நேரத்துக்குள் பதிவு செய்தோ அல்லது திருத்தத்துக்காக திருப்பி அனுப்பியோ அல்லது நிராகரித்தோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருகையில்லா ஆவணப்பதிவின் மூலம் இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சார்பதிவாளர்களால் தற்போதுள்ள நடைமுறையில் உள்ளபடி சரிபார்க்கப்பட்டு, சட்ட விதிகளுக்குட்பட்டு பதிவு செய்யப்படும்.
திருத்தத்துக்காகத் திருப்பி அனுப்பப்படும் ஆவணங்களை திருப்பி அனுப்பப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தேவையான திருத்தங்களுடன் மீண்டும் சமர்ப்பிக்கலாம்.
பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் சார்பதிவாளர் டிஜிட்டல் கையொப்பமிட்டு, ஆவணப்பதிவுக்காக உருவாக்கப்பட்டபயனர் உள்நுழைவில் அவை கிடைக்கச் செய்யப்படும்.
பயனர் உள்நுழைவில் கிடைக்கும் பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை 60 நாள்களுக்குள் தேவையான எண்ணிக்கையில் பதிவிறக்கம் செய்யும் வகையில் மென் பொருள் வசதி செய்யப்பட்டுள்ளது. 60 நாள் முடிந்த பின், பொதுமக்கள் நடைமுறையில் உள்ள முறையின்படி சான்றிட்ட நகலுக்கு விண்ணப்பித்து பதிவு செய்யப்பட்ட ஆவணத்தைப் பெறலாம்.
மக்கள் நலனுக்காகவும், பதிவு நடைமுறையை எளிமைப்படுத்தி, வெளிப்படைத்தன்மையோடு செயல்படுத்திடும் வகையிலும் மனை மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டுக்கான முதல் விற்பனை ஆவணத்தை பதிவுத்துறை யில் வருகையில்லா ஆவணப்பதிவு முறையின்கீழ் பதிவு செய்வது கட்டாயமாக்கப்படுகிறது.
இந்த புதிய வசதியை முதல்வர் விஜய் நேற்று தலைமைச்செயலகத்தில் தொடங்கி வைத்தார். நிகழ்வில், அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன், துறை செயலர் ஜெ.குமரகுருபரன், பதிவுத்துறைத் தலைவர்.ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.