

மதுரை: தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. சமீபத்தில், திருத்தணியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த தொழிலாளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தமிழகத்தின் சட்டம், ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது.
இதுபோன்ற குற்றச்செயல்களுக்கு போதைப்பொருள் பயன்பாடும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இதனால், தமிழகத்தில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஊதியம், வேலை நேரம் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பான சட்டங்களை கடுமை யாக அமல்படுத்த வேண்டும்.
அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களையும் பதிவு செய்து, அடையாள அட்டை வழங்க வேண்டும். விபத்துக் காப்பீடு போன்ற சமூக பாதுகாப்பு நிதி திட்டங்கள், புலம்பெயர் தொழிலாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய மாநில மற்றும் மாவட்ட அளவில் புலம்பெயர் தொழிலாளர் ஆலோசனைக் குழுவை நியமிக்கவும், புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகளவில் உள்ள பகுதிகளில் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தவும், போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “தமிழகம் முழுவதும் புலம் பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களுக்கு மிகக் குறைவான அளவிலேயே ஊதியம் வழங்கப்படுகிறது. சமீபகாலமாக புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், “அந்த ஊதியம்கூட அவர்கள் சொந்த ஊரில் வழங்கப்படவில்லை. ஒரு நிகழ்வை மட்டும் அடிப்படையாக வைத்து நடவடிக்கை எடுக்கக் கூறமுடியாது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை குறிவைத்து திட்டமிட்டு தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்றனர். பின்னர் நீதிபதிகள், மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜன.22-க்கு தள்ளிவைத்தனர்.