புதுச்சேரி எம்எல்ஏவை தடுத்த விவகாரம்: 30 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு

புதுச்சேரி எம்எல்ஏவை தடுத்த விவகாரம்: 30 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு
Updated on
1 min read

புதுச்சேரி: திருபுவனையில் தனியார் நிறுவனத்தில் ஆய்வு செய்ய சென்ற தவெக எம்எல்ஏ சாய் ஜெ.சரவணன்குமாரை சாதி பெயரை கூறி நிறுவனத்துக்குள் அனுமதி மறுத்ததாக 2 ஹெச்ஆர் மேலாளர்கள் உள்ளிட்ட 30 ஊழியர்கள் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி அடுத்த திருபுவனையில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைக்குள் தவெக எம்எல்ஏ‌ சாய் ஜெ சரவணன்குமார் கடந்த 21-ம் தேதி ஆய்வு செய்வதற்காக உள்ளே சென்றார். அப்போது பட்டியலினத்தவர் என சாதியை குறிப்பிட்டு தொழிற்சாலைக்குள் வரக்கூடாது என தொழிற்சாலை நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து அவர் புதுச்சேரி பிசிஆர் செல் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அந்த புகாரில், எனது தொகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பட்டியலின தொழிலாளர்களுக்கு உணவு தட்டில் பாகுபாடு காட்டுவதாகவும், பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் நசுக்கப்படுவதாகவும், மக்கள் பயன்படுத்தக்கூடிய குளம், கோயில் இடங்களை நிறுவனம் ஆக்கிரமித்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் பார்வையிட காவல்துறை அதிகாரி, கொம்யூன் அதிகாரி, தொழிற்சாலை நிர்வாக அலுவலர்களிடம் முறைப்படி தெரிவித்து தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் சென்றேன்.

அப்போது அந்த நிறுவனத்தின் ஹெச்ஆர் மேலாளர்கள் அருண்குமார், சிவசங்கர், காவலர்கள் மேலும் பெயர் தெரியாதவர்கள் 30 பேர் என்னை உள்ளே வரக்கூடாது என்று தடுத்தனர்.

தொகுதி எம்எல்ஏ உள்ளே வரக்கூடாதா என்று கேட்டதற்கு என்னையும், எனது உதவியாளர் நான்கு பேரையும் பார்த்து நீங்கள் பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் எனவே நிறுவனத்துக்குள் வரக்கூடாது என்று மீண்டும் தடுத்தனர். மேலும் காவலாளி அறையில் அமர வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அங்கிருந்து வெளியே வந்துவிட்டேன்.

சாதியின் அடிப்படையில் பட்டியலின எம்எல்ஏவை உள்ளே வரக்கூடாது என்று கூறி தடுத்த ஹெச்ஆர் மேலாளர்கள் இருவர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து பிசிஆர் செல் சப்இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியம் மற்றும் போலீஸார் தனியார் நிறுவன ஹெச்ஆர் மேலாளர்கள் அருண்குமார், சிவசங்கர், 2 காவலாளிகள், சபாரி உடையணிந்த நபர்கள் என 30 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்விவகாரத்தில் தனியார் நிறுவனத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக அந்த நிர்வாகம் தரப்பில் கொடுத்த புகாரின் பேரில் தவெக எம்எல்ஏ சாய் ஜெ சரவணன்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது திருபுவனை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி எம்எல்ஏவை தடுத்த விவகாரம்: 30 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு
“இந்து சமய அறநிலைய துறையை சேகர்பாபு வேவு பார்க்கிறார்” - அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in