பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு
Updated on
2 min read

சென்னை: பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள புதிய தலைமைச் செயலக கட்டுமான பணிக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற தவெக அரசு, சென்னை-பட்டினப்பாக்கத்தில், ரூ.1,200 கோடி மதிப்பில், புதிய தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பை, சமீபத்தில் முதல்வர் விஜய், சட்டசபையில் வெளியிட்டார்.

பட்டினப்பாக்கத்தில் உள்ள தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 21.37 ஏக்கர் நிலத்தில், புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அரசாணையை, கடந்த வாரம் தமிழக அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு, அரசியல் கட்சிகளும், மீனவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்ட தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கோடம்பாக்கத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அதன் விபரம்: பட்டினப்பாக்கத்தில் உள்ள தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான இடத்தில், புதிய தலைமை செயலகம் கட்ட, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

நிதி நெருக்கடியில் உள்ளதாக, தற்போதைய தவெக, தலைமையிலான அரசு அறிவித்து உள்ளது. அவ்வாறு இருக்கும்போது, புதிய கட்டிடம் கட்டுவதற்கு ரூ.1,200 கோடி செலவு செய்வதை விட, புனித ஜார்ஜ் கோட்டையில், தற்போது இயங்கி வரும் தலைமை செயலக கட்டடத்தைப் புதுப்பித்து பயன்படுத்தினால், இவ்வளவு பெரிய தொகை செலவாகாது.

மக்களின் வரிப்பணமும் சேமிக்கப்படும். அந்த கட்டிடம் நல்ல நிலையில் தான் உள்ளது. சென்ட்ரல் ரயில் நிலையம், உயர் நீதிமன்றம், பேருந்து நிலையம், அரசு பொது மருத்துவமனை போன்றவற்றுக்கு அருகில் உள்ள தலைமை செயலகம் இடமாற்றம் செய்யப்பட்டால், பொது மக்கள் வந்து செல்வது மிகவும் கடினமாகிவிடும்.

முந்தைய திமுக அரசு, அண்ணா சாலையில் 400 கோடி செலவில், புதிய தலைமைச் செயலகம் கட்டி, பின், அதை அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், ஏழை எளிய மக்களுக்கு வீடு வழங்கும் திட்டம் பாதிக்கப்படும். ஏற்கனவே, அங்கிருந்த வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அவ்வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்டுவதற்காகப் பொது மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட இருந்தது.

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால், அங்குள்ள மீனவர்களின் நலனும் பாதிக்கப்படும். எனவே, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை கைவிட கோரி, செப்.12-ல் தமிழக அரசின் தலைமைச் செயலர், பொது பணித்துறை தலைமை பொறியாளர், தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் ஆகியோருக்கு மனு அளித்தேன். இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. புதிய தலைமைச் செயலக கட்டுமானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் தினமும் போராட்டம் நடத்தி வருவதால், இந்த வழக்கை உடனே தாக்கல் செய்கிறேன்.

எனவே, பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை கைவிடும்படி உத்தரவிட வேண்டும். மேலும், இந்த வழக்கில் தீர்வு எட்டும் வரை, தலைமைச் செயலக கட்டுமான பணிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து வழக்கு
Lava Bold N4 Pro ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in