தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சித் தலைவராக பதவி வகிப்பவர் சாந்தி. திமுகவைச் சேர்ந்த இவர், தனது கணவர் சேகர், மாமனார் செல்வராஜ் ஆகியோரின் பெயரில் பேரூராட்சி பணிகளை டெண்டர் எடுத்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஒப்பந்ததாரர் செந்தில்குமார் என்பவர் 2025-ம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 6 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க பேரூராட்சி இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டது. இதுதொடர்பாக, தொடர் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, பேராவூரணியைச் சேர்ந்த நீலகண்டன் என்பவர் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில் மனு அளித்ததுடன், மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
அதன்பேரில், தஞ்சாவூர் லஞ்சஒழிப்புத் துறை போலீஸார் நடத்திய விசாரணையில், பேராவூரணி ஆனந்தவள்ளி வாய்க்கால் சாலை, பழைய பேராவூரணி குறுக்குச் சந்து, தெப்பக்குளம் தெரு, நாட்டாணிக்கோட்டை குறுக்கு சந்து ஆகிய இடங்களில் நடைபெற்ற சாலை மேம்பாட்டு பணிகளில் பல்வேறு முறைகேடுகளை செய்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பேராவூரணி பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலரான, தற்போது அய்யம்பேட்டையில் பணியாற்றி வரும் பழனிவேல், பேரூராட்சித் தலைவர் சாந்தி, பேரூராட்சி முன்னாள் இளநிலை பொறியாளரான, தற்போது திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சியில் பணியாற்றி வரும் தாமஸ் ஆனந்த், பேரூராட்சி தலைவரின் கணவர் சேகர், மாமனார் செல்வராஜ், பேரூராட்சி தற்காலிக கணினி ஆபரேட்டர் ஜமுனா ராணி, நீலகண்டன் ஆகியோர் மீது 10 பிரிவுகளின்கீழ் மார்ச் 11-ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதைதொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.