

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் போராட்டம் நடத்திய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட 113 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
ஆனால், 144 தடையை காரணம் காட்டி தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது. இதைக் கண்டித்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் இந்து மக்கள் கட்சி, ஆலயப் பாதுகாப்பு குழு உள்ளிட்ட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
இந்நிலையில், நயினார் நாகேந்திரன் உட்பட 93 பாஜக, இந்து மக்கள் கட்சி, ஆலயப் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த 20 பேர் என மொத்தம் 113 பேர் மீது சட்டவிரோதமாக கூடியது, போக்குவரத்துக்கு இடையூறு, அனுமதியின்றி போராட்டம் செய்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் திருப்பரங்குன்றம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.