

தமிழக அமைச்சர் மரிய வில்சன் | கோப்புப் படம்
புதுச்சேரி: தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் மீதான வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றி புதுச்சேரி நீதிமன்ற தலைமை நீதிபதி ஆனந்த் உத்தரவிட்டார்.
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன். கடந்த 2022-ம் ஆண்டு புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குளோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குளோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். புதுச்சேரி ஜே.எம். 1 நடுவர் நீதித்துறை மன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்து வந்த மாஜிஸ்திரேட் சேரலாதன் புதுச்சேரி பிராந்தியமான மாஹே மாவட்ட முன்சீப் மற்றும் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் ஆக மாற்றப்பட்டார்.
இதனால் ஜேஎம் 1 நடுவர் நீதித்துறை மன்றத்தின் நடந்த வழக்கை ஜேஎம் 2 மாஜிஸ்திரேட் சந்திரசேகர் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் ஜேஎம் 1-ல் மாஜிஸ்திரேட் இல்லாததால் இவ்வழக்கு மனு விசாரணைக்கு வரும்போது ஜேஎம் 2 நீதிமன்றத்துக்கு சென்று விசாரணை நடக்கிறது. இந்நிலையில், புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் தரப்பில் கடந்த 16-ம் தேதி மனு தாக்கல் செய்தனர். அதில், அமைச்சர் மீதான வழக்கை வேறு நடுவர் நீதித்துறை மன்றத்தில் மாற்றக் கோரியிருந்தனர்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் தரப்பு மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை எடுத்து வைத்தனர். அதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது இவ்வழக்கை ஜேஎம் 6 நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.