

சென்னை: அமலாக்கத் துறை குற்றச்சாட்டின் அடிப்படையில் அமைச்சர் நேருவுக்கு எதிராக ஊழல் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரி, அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
ரூ.1,000 கோடி ஊழல்: தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் கே.என்.நேரு, சுமார் 2 ஆயிரத்து 588 பணியிடங்களை சட்டவிரோதமாக நிரப்பியுள்ளார் என்றும், இதற்காக ரூ.25 லட்சம் முதல் ரூ. 35 லட்சம் வரை லஞ்சம் பெற்றுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் ரூ.1,000 கோடிக்கு மேலாக ஊழல் செய்துள்ளதாகவும் அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அமைச்சர் கே.என். நேரு, அவரது சகோதரர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரின் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
அரசுப் பணிகளை லஞ்சம் வாங்கிக் கொண்டு நிரப்பியுள்ளது தொடர்பாக அமைச்சர் நேரு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கக் கோரி லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, டிச. 13-ம் தேதி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமைச்சர் நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்துமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.