‘புகாரில் முகாந்திரம் இல்லை’ - மருத்துவக் கல்லூரிகள் தொடர்பான இபிஎஸ் மீதான வழக்கில் அரசு தகவல்

இபிஎஸ்

இபிஎஸ்

Updated on
1 min read

சென்னை: 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை என முடித்து வைக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், திண்டுக்கல், நாகப்பட்டினம், விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டன.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பொதுப் பணித் துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கட்டப்பட்ட இந்த மருத்துவ கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை என்றும், மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், இது சம்பந்தமாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை சேர்ந்த விவசாயி என்.ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ‘மத்திய அரசின் 60 சதவீத நிதி பங்களிப்புடன் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். சிபிஐ உள்ளிட்ட மத்திய புலன் விசாரணை அமைப்புகள் விசாரணை செய்வதற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெற்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்த அரசாணையை ரத்து செய்து, நான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கும்படி சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ‘மனுதாரரின் புகார் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தியது. இதில், புகாரில் முகாந்திரம் இல்லை என தெரியவந்ததை அடுத்து, புகார் முடித்து வைக்கப்பட்டது’ எனத் தெரிவித்தார்.

முகாந்திரம் இல்லை என புகார் முடித்து வைக்கப்பட்டதை நீதித் துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியுமா என்பது குறித்து, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி விளக்கமளிக்கும்படி, மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

<div class="paragraphs"><p>இபிஎஸ்</p></div>
“மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in