“மகாத்மா காந்தி மீதான வெறுப்பால் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கிறார் பிரதமர் மோடி” - ராகுல் காந்தி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Updated on
2 min read

சென்னை: “மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் ஏழைகளின் உரிமைகள் மீது பிரதமர் மோடிக்கு ஆழ்ந்த வெறுப்பு உண்டு. அதனால், அவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறார்” என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிரதமர் மோடிக்கு இரண்டு விஷயங்கள் மீது ஆழ்ந்த வெறுப்பு உண்டு - மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் ஏழைகளின் உரிமைகள்.

மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்யம் என்ற தொலைநோக்குப் பார்வையின் வாழும் வடிவமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (MGNREGA) திகழ்கிறது. இது கோடிக்கணக்கான கிராமப்புற இந்தியர்களுக்கு ஓர் உயிர்நாடியாக இருந்து வருகிறது. மேலும், கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஒரு முக்கியமான பொருளாதாரப் பாதுகாப்பு வலையாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தத் திட்டம் பிரதமர் மோடியை எப்போதும் கலக்கமடையச் செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, அவரது அரசாங்கம் இத்திட்டத்தை திட்டமிட்டு பலவீனப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இன்று, அவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முற்றிலுமாக ஒழிப்பதில் உறுதியாக இருக்கிறார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மூன்று அடிப்படைக் கொள்கைகளின் மீது கட்டமைக்கப்பட்டது. அவை:

1. வேலைவாய்ப்புக்கான உரிமை - வேலை கோரும் எவருக்கும் வேலை வழங்கப்பட வேண்டும்.

2. கிராமங்கள் தங்களின் சொந்த வளர்ச்சிப் பணிகளைத் தீர்மானிப்பதற்கான சுயாட்சி.

3. முழு ஊதிய ஆதரவு மற்றும் மூலப்பொருட்களுக்கான செலவில் 75% மத்திய அரசால் வழங்கப்படும்.

இப்போது, ​பிரதமர் ​மோடி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை ஒரு மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டுக் கருவியாக மாற்ற விரும்புகிறார். அவை:

1. வரவு செலவுத் திட்டங்கள், செயல் திட்டங்கள் மற்றும் விதிகள் மத்திய அரசால் கட்டளையிடப்படும்.

2. திட்டத்துக்கான செலவுகளில் 40% மாநிலங்கள் ஏற்கும்படி கட்டாயப்படுத்தப்படும்.

3. நிதி தீர்ந்துவிட்டால் அல்லது அறுவடை காலங்களில் தொழிலாளர்களுக்கு மாதக்கணக்கில் வேலை மறுக்கப்படும்.

இந்த புதிய மசோதா மகாத்மா காந்தியின் லட்சியங்களுக்கு நேரடியான அவமதிப்பாகும். பெரிய அளவிலான வேலையின்மை மூலம் இந்தியாவில் இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்த பிறகு, மோடி அரசாங்கம் இப்போது ஏழை கிராமப்புறக் குடும்பங்களின் பாதுகாப்பான வாழ்வாதாரத்தை குறிவைக்கிறது’ என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறுதித் திட்​டத்​தின் பெயரை ‘விபி-ஜி ஆர்ஏஎம் ஜி’ (VB-G RAM G) என மாற்றும் மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மக்களவையில் அறிமுகப்படுத்தினார்.

விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (கிராமப்புறம்) [Viksit Bharat — Guarantee For Rozgar And Ajeevika Mission (Gramin)] அதாவது VB-G RAM G என இந்த மசோதாவுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ராகுல் காந்தி
100 நாள் வேலைத் திட்டம் பெயர் மாற்றம்: சென்னையில் டிச.18-ல் காங். ஆர்ப்பாட்டம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in