

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: கீழமை நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர்கள் சங்கம் தொடர்ந்துள்ள வழக்கில், பொங்கலுக்குப் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கீழமை நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறையைக் கண்டித்து வழக்கறிஞர்கள், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இ-ஃபைலிங் கட்டாயம் என்பதை கைவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (எம்எச்ஏஏ), தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், வழக்கறிஞர்கள் ஜி.மோகனகிருஷ்ணன், ஆர்.கிருஷ்ணகுமார், என்.மாரப்பன் ஆகியோர், “இ-ஃபைலிங் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே வழக்கமான முறையில் நேரடியாக வழக்குகளை தாக்கல் செய்வதற்கு தடை விதிக்கக் கூடாது. இந்த சிக்கல்கள் தீரும்வரை இரண்டு முறையிலும் வழக்குகளை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்” என வாதிட்டனர்.
அதையடுத்து நீதிபதிகள், இது தொடர்பாக பொங்கலுக்குப் பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் எனக் கூறி விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.