

சென்னை: திருவான்மியூர் ராஜீவ்காந்தி சாலையில், மெட்ரோ ரயில் பணிகளின் போது, நேற்று காலை திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதில் கார் விழுந்து தலைகீழாக கவிழ்ந்தது.
சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.மீ தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப் படுகிறது. இவற்றில் மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரையிலான 3-வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் திருவான்மியூரிலிருந்து தரமணி நோக்கி ‘பவானி’ என்ற சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இந்நிலையில், திருவான்மியூர் மெட்ரோ ரயில் நிலையப் பகுதியிலிருந்து சுமார் 30 மீட்டர் தொலைவில், எல்நெட் (Elnet) கட்டிடத்துக்கு எதிரே உள்ள சாலையில் நேற்று காலை சுமார் 10:45 மணியளவில், திடீரென ஒரு பெரிய பள்ளம் உருவானது. அப்போது அந்த சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அந்த பள்ளத்துக்குள் விழுந்தது. காரை ஓட்டி வந்த ஓட்டுநர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். பள்ளத்தில் விழுந்த காரும் கிரேன் மூலம் வெளியில் எடுக்கப்பட்டது.
இச்சம்பவத்தை தொடர்ந்து, அந்தப் பகுதி பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டது. பள்ளத்தை கான்கிரீட் கலவை கொண்டு மூடும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்கின்றனர். திருவான்மியூர் ராஜீவ்காந்தி சாலையில் பெரிய பள்ளம் உருவான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.