

மதுரை: “புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்புடைய ஓர் அதிகாரியை கூட இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா? 24 மணி நேரத்தில் முறைகேட்டில் தொடர்புடைய ஒருவரை கூட கண்டுபிடிக்க முடியாவிட்டால் இது இயலாமைதான்” என உயர் நீதிமன்ற மதுரை கிளையின் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பொது நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் தொடர்பாக கடந்த 2024-ல் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத நூலகத் துறை முதன்மைச் செயலாளர், நூலகத் துறை இயக்குநர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி நெல்லையைச் சேர்ந்த ராமசுப்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எம்.டி.சுமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்தியன் வாதிடுகையில், “புத்தக கொள்முதல் முறைகேடு தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு நவ.6-ல் புகார் அளிக்கப்பட்டது. 7-ம் தேதி விசாரணை தொடங்கப்பட்டது. 9-ம் தேதி அகல் விளக்கு பதிப்பகத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. கொள்முதல் ஒப்பந்த விபரங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
நவ.10-ம் தேதி எழுத்தாளர் பெருமாள் முருகன், சதீஷ்குமார், பிரேம் குமார் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அகல் விளக்கு பதிப்பகத்தின் 3 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்குப் பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை நகல் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்” என்றார்.
பொது நூலகத் துறை இயக்குநர் ஷஜீவனா காணொளியில் ஆஜரானார். அவரிடம் நீதிபதி, “அகல் விளக்கு பதிப்பகத்திடம் புத்தகம் கொள்முதல் செய்ய யார் பரிந்துரை செய்தது?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், “புத்தக பரிந்துரை குழு தான் பரிந்துரை செய்தது” என்றார். நீதிபதிகள், “இது சரியான பதில் இல்லை. புத்தகக் குழுவில் யார் பரிந்துரை செய்தது?” என்றனர். அவர், “112 பேர் கொண்ட புத்தகக்குழு தான் பரிந்துரை செய்தது” என்றார்.
தொடர்ந்து ஷஜீவனா, “112 உறுப்பினர்கள் கொண்ட குழு பரிந்துரையின் பேரிலேயே புத்தகங்கள் வாங்கப்பட்டன. பெரியார் அறிவுலகத்துக்கு மட்டும் அகல் விளக்கு பதிப்பகத்திடம் இருந்து 2,335 புத்தகங்கள் வாங்க பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், 1700 புத்தகங்களை வாங்கப்பட்டது. தலைப்புக்கு ஒரு புத்தகம் வாங்கப்பட்டது. இதற்காக ரூ.17 லட்சம் வழங்கப்பட்டது. மற்ற நூலகங்களில் உள்ள அகல் விளக்கு புத்தகங்கள் கணக்கெடுக்கப்படுகிறது. அனைத்து நூலகங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அகல் விளக்கு பதிப்பக நூல்களை நூலகத் துறை வாங்கியதா? யாராவது பரிசாக கொடுத்தார்களா என கேட்டுள்ளோம். நாளை மாலைக்குள் அனைத்து தகவல்களும் கிடைத்து விடும்” என்றார்.
அரசுத் தரப்பில், “பரிந்துரைக் குழு, தேர்வுக்குழு, கொள்முதல் குழு மற்றும் உயர்மட்டக் குழு என நான்கு நிலைகளில் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “இந்த 4 நிலைகளிலும் அகல் விளக்கு பதிப்பு புத்தகங்களை வாங்க பரிந்துரைக்கப்பட்டதா?” என்றார்.
கிழக்கு பதிப்பகத்தின் பத்ரி சேஷாத்ரி காணொலி வாயிலாக ஆஜராகி, “தனி பதிப்பகத்திடமிருந்து மட்டும் ரூ.17 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது மிக அதிகம். 22 ஆண்டுகளாக நடந்து வரும் கிழக்கு பதிப்பகத்தில் ரூ.23,980 மட்டுமே புத்தகம் கொள்முதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் மட்டும் நூலகங்களுக்கு ரூ.27 லட்சத்துக்கு அகல் விளக்கு பதிப்பகத்திடமிருந்து புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. வேறு எந்த பதிப்பகத்திடம் இருந்தும் இந்தளவு புத்தகம் கொள்முதல் செய்யப்படவில்லை. இதில் தவறு இருப்பதாக தோன்றுகிறது.
புத்தக பரிந்துரை குழுவில் இடம்பெற்ற அனைவரும் நிபுணத்துவம் பெற்றவர்கள். போலி புத்தகம் வாங்க குழுவினர்தான் பரிந்துரை செய்தனர் என குற்றச்சாட்டு வைப்பது அதிர்ச்சியாக உள்ளது. இது குழுவில் இடம் பெற்றுள்ள எழுத்தாளர்கள், பதிப்பகத்தினரை அவமானப்படுத்தும் செயலாகும். குழுவினர் அகல் விளக்கு பதிப்பு புத்தகம் வாங்க பரிந்துரைக்கவில்லை.
புத்தக கொள்முதலில் மிகப் பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. ஏஜ தொழில்நுட்பத்தில் போலி புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக முழு உண்மையும் தெரிய வேண்டும். நான்கு நிலைகளில் புத்தகம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த நிலையில் அகல் விளக்கு பதிப்பகம் சேர்க்கப்பட்டது என்பதை கண்டுபிடித்து விடலாம்.
ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற மோசடி நடைபெறுகிறது. இந்த முறை ஏஐ தயாரிப்பு போலி புத்தகங்களை குறிப்பிட்ட பதிப்பகத்திடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது. புத்தக கொள்முதல் தொடர்பான அனைத்து விபரங்களும் உடனடியாக எடுத்துவிடலாம்” என்றார்.
அரசு தரப்பில், “பத்ரிக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் வெளியில் இருந்து கொண்டு எதை வேண்டுமானாலும் சொல்ல முடியும். கால அவகாசம் வழங்கினால் அனைத்து விபரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அரசு தயாராக உள்ளது” எனக் கூறப்பட்டது.
தொடர்ந்து நீதிபதிகள், “இந்த முறைகேடு தொடர்புடைய ஓர் அதிகாரியை கூட இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா? 24 மணி நேரத்தில் முறைகேட்டில் தொடர்புடைய ஒருவரை கூட கண்டுபிடிக்க முடியாவிட்டால் இது இயலாமைதான்” என்றனர்.
நூலகத் துறை இயக்குநர், ”லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து வருகிறது” என்றார். நீதிபதிகள், “இது குற்றவியல் நடவடிக்கை. துறைரீதியான நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை. கூலாக வந்து எல்லா தவறையும் பரிந்துரை குழுவின் மீது வைக்கிறீர்கள். இது அதிர்ச்சியாக உள்ளது.
பரிந்துரை குழு பிரதமரின் ‘மனதின் குரல்’ புத்தகம் வாங்க பரிந்துரை செய்துள்ளது. அந்த புத்தகம் கொள்முதல் செய்யப்படவில்லை. புத்தக கொள்முதல் முறைகேடு 1985-ல் நடைபெற்றது. அப்போது இருந்து இப்போது வரை அந்த முறைகேடு தொடர்கிறது” என்றார்.
பின்னர் நீதிபதிகள், “விசாரணை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்று அரசு தரப்பிலும், பத்ரி தரப்பிலும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.
நூலக இயக்குநர் மீது நீதிபதிகள் அதிருப்தி:
வழக்கு விசாரணையின்போது பொது நூலகத் துறை இயக்குனர் ஷஜீவனா காணொளியில் ஆஜராகுவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் நீதிபதிகள், “மேடம் உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம், வரவிட்டால் நேரில் ஆஜராக வேண்டியது வரும். உங்களுக்காக எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்” என்றனர்.
அரசு தரப்பில், “இணையதள இணைப்பு சரியாக இல்லை” எனக் கூறப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “இணைப்பு சரியாக கிடைக்காவிட்டால் நேரில் வரச் சொல்ல வேண்டியது தான். இயக்குநரின் செயல்பாடு சரியாக இல்லை” என்றனர். உடனே அரசு வழக்கறிஞர், ஷஜீவனாவிடம், “மேடம் நீதிமன்றத்துக்கு மரியாதை கொடுங்கள்” என்றார்.
இதையடுத்து ஷஜீவனா காணொளியில் பேசினார். அவர் பேசியது சரியாக கேட்காத நிலையில் நீதிபதிகள், “வேண்டும் என்றே செய்கிறீர்களா?” என்றனர். தொடர்ந்து அவர், “நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.
பின்னர் நீதிபதிகள், “விசாரணையை திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கிறோம். அன்று முழு விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். தாக்கல் செய்வீர்களா? அல்லது அன்றும் இன்று கூறியதுபோல் தான் கூறுவீர்களா?” என கேள்வி எழுப்பினர். அதற்கு முதலில் “முயற்சிக்கிறேன்” என்ற ஷஜீவனா, பின்னர் தாக்கல் செய்வதாக கூறினார்.