

தாராபுரம் தொகுதியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் விஜய், மூலனூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சாலையில் நடந்து சென்று அங்கு திரண்டிருந்த மக்களிடம் ஆதரவு திரட்டினார்.
மதுராந்தகம்/தாராபுரம்: மதுராந்தகம், தாராபுரத்தில் வேட்பாளர்கள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன் ஆகியோர் நேற்று மதுராந்தகம் நகரப்பகுதியில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது: தற்போது இருப்பது உண்மையான அதிமுக அல்ல. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் அதிமுக முடிந்துவிட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை கமிஷன் மூலம் என்ன நடந்தது என்பதை முதல்வர் விஜய் நிச்சயம் வெளியே கொண்டு வருவார்.
அதிமுகவும், திமுகவும் ஒப்பந்தம் போட்டு செயல்பட்டு கொண்டிருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார். இறுதியாக பேருந்து நிலையம் அருகே பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். இதேபோல், அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களும் நகரப்பதியில் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். இதனால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
தாராபுரம் தொகுதியில் அதிமுக, திமுக, தவெக, நாதக, இ.கம்யூனிஸ்ட், சுயேச்சைகள் என 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த 2 வாரங்களாக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை பிரச்சாரம் ஓய்ந்தது. கடைசி நாளில் வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அதிமுக வேட்பாளர் பானுமதி பேருந்து நிலையம் எதிரே உள்ள தேர்தல் பணிமனையில் இருந்து திறந்த ஜீப்பில் ஊர்வலமாக சென்று வாக்கு சேகரித்தார். அண்ணா சிலை, பூக்கடை வழியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டியதுடன் அண்ணா சிலை அருகில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் லட்சுமணன் தாராபுரம் நகரின் பல்வேறு இடங்களில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திறந்த வாகனத்தில் ஊர்வலமாக கட்சி நிர்வாகிகளுடன் சென்ற அவர் அண்ணாசிலை அருகில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இதேபோல, திமுக வேட்பாளர் சுகன்யா, நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா ஆகியோரும் நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.