துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் தகிக்கும் ஆலங்குளம் தொகுதி யாருக்கு சாதகம்?

சூறாவளியாய் சுழன்று பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்கள்
துப்பாக்கிச் சூடு சம்பவத்தால்  தகிக்கும் ஆலங்குளம் தொகுதி யாருக்கு சாதகம்?
Updated on
2 min read

தென்காசி: ஆலங்குளம் சட்டப்பேரவைத் தொகுதியில் மொத்தம் 2,53,408 வாக்காளர்கள் உள்ளனர். விவசாயம், பீடி சுற்றும் தொழில், செங்கல்சூளை, அரிசி ஆலைகள் அதிகமாக உள்ள தொகுதி இது.

வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழிற்சாலைகளை கொண்டுவர வேண்டும், ஆலங்குளத்தில் அரசு போக்கு வரத்துக் கழக பணிமனை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகள் இத்தொகுதி மக்களிடம் உள்ளன.

ஆலங்குளம் தொகுதியில் திமுக சார்பில் பால் மனோஜ் பாண்டியன், அதிமுக சார்பில் கே.ஆர்.பி.பிரபாகரன், தவெக சார்பில் விபின் சக்கரவர்த்தி, நாதக சார்பில் பால்ராஜ் மற்றும் பல்வேறு கட்சிகள், சுயேச்சைகள் உட்பட மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திமுக- தனி வருவாய் வட்டம்: திமுக வேட்பாளர் பால் மனோஜ் பாண்டியன், கடந்த முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த போது, தொகுதிக்கு தன்னால் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு கேட்டு வருகிறார்.

மேலும், கடந்த 5 ஆண்டு கால திமுக அரசின் சாதனைகள், தற்போது திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த பல்வேறு திட்டங்களையும் எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்கிறார். கடையத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி வருவாய் வட்டம் உருவாக்கப்படும், தொகுதி வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்து வருகிறார்.

அதிமுக- கருப்பட்டி ஏற்றுமதி: அதிமுக வேட்பாளர் பிரபாகரன், முந்தைய அதிமுக அரசின் திட்டங்களையும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளையும் கூறி பிரச்சாரம் செய்து வருகிறார். பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த கருப்பட்டி ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பாடு செய்வதாகவும், பனை தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாகவும் கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.

தவெக- பெண்களின் பாதுகாப்பு: தவெக வேட்பாளர் விபின் சக்கரவர்த்தி மாற்றத்தை கொண்டுவரவும், பெண்கள் பாதுகாப்பாக இருக்கவும் தனக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்து வருகிறார். மேலும், விஜய் அறிவித்த வாக்குறுதிகளை வாக்காளர்களிடம் கூறி வாக்கு சேகரிக்கிறார்.

நாதக- நீர்நிலைகள் பாதுகாப்பு: நாதக வேட்பாளர் பால்ராஜ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட திட்டங்களை கூறி பிரச்சாரம் செய்து வருகிறார். தொகுதியில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும், நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும், ஆலங்குளம் அரசு மருத்துவமனை மேம்படுத்தப்படும், முக்கூடல் பீடி தொழிலாளர் மருத்துவமனை மீண்டும் செயல்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை கூறி பிரச்சாரம் செய்து வருகிறார்.

யாருக்கு சாதகம்?

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் சமீபத்தில் பனை தொழிலாளி மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் தேர்தலில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. அந்த சம்பவத்தை பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களும் சுட்டிக்காட்டி, வாக்குகளை தங்களுக்கு சாதகமாக திரட்ட முயன்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் ஆலங்குளம் தொகுதி யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற தகிப்பு வேட்பாளர்கள், வாக்காளர்கள் மத்தியில் காணப்படுகிறது.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தால்  தகிக்கும் ஆலங்குளம் தொகுதி யாருக்கு சாதகம்?
கோவை வடக்கு தொகுதியில் வாகை சூடப்போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in