

அகத்தியா நகரில் ஆதவ் அர்ஜுனா பிரச்சாரம்.
விஐபி தொகுதியாக மாறியுள்ள வில்லிவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் கார்த்திக் மோகன்களம் காண்கிறார்.
அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி.யான எஸ்.ஆர்.விஜயகுமார், நாதக சார்பில் ரோஷினி, தவெக சார்பில் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகின்றனர். இத்தொகுதியில், சுயேச்சைகள் உள்பட 28 பேர் களத்தில் உள்ளனர்.
திமுக - உங்கள் வீட்டுப் பிள்ளையின் உறுதிமொழி
திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன், 5 ஆண்டுகால சாதனைகளை பட்டியலிட்டு, வாக்கு சேகரித்து வருகிறார்.
மேலும், “திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள ரூ. 8,000 கூப்பன் திட்டம் ஒரு வரப்பிரசாதமாக அமையும். இது வெறும் தேர்தல் வாக்குறுதி அல்ல, உங்கள் வீட்டுப் பிள்ளையின் உறுதிமொழி” என பிரச்சாரம் செய்து வருகிறார்.
வில்லிவாக்கம் பாரதி நகரில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன் பிரச்சாரம்.
அதிமுக - நல்ல மாற்றம் நிச்சயம் என நம்பிக்கை
அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத் திட்டங்களையும், தொகுதிக்கு செய்த நன்மைகளையும் மக்களிடம் நினைவூட்டி வாக்கு சேகரித்து வருகிறார்.
அயனாவரம் வெள்ளாளர் தெருவில் அதிமுக வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் பிரச்சாரம்.
மேலும், தற்போதைய ஆட்சியின் குறைகளைச் சுட்டிக்காட்டுவதோடு, மக்களின் கோரிக்கைகளை இன்முகத்துடன் கேட்டு, ‘நிச்சயம் நல்ல மாற்றம் பிறக்கும்’ என்று நம்பிக்கையூட்டி வருகிறார்.
வில்லிவாக்கம் கடை வீதிகளில் ரோஷினி பிரச்சாரம்.
நாதக-பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதி
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரோஷினி, ‘விண்ணைத்தொடும் வில்லிவாக்கம்’ என்ற தொலைநோக்குப் பார்வையுடன் முன்வைக்கும் வாக்குறுதிகள் தொகுதி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதே எனது இலக்கு என பிரச்சாரம் செய்து வருகிறார்.
தவெக - உறவு முறை சொல்லி பாசமழை
தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில், வாக்காளர்களை அக்கா, தங்கை என உறவுமுறை சொல்லி அழைத்து சென்டிமெண்ட் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.
ஊழலற்ற, நவீன வசதிகள் கொண்ட ஒரு முன்மாதிரி வில்லிவாக்கத்தை உருவாக்கித் தருவேன் என உறுதி அளித்து வருகிறார். வில்லிவாக்கம் தொகுதி விஐபி தொகுதியாக மாறி உள்ளதால் பிரச்சாரமும் வீரியமுடன் காணப்படுகிறது.