

அகமதாபாத்: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 17 ரன்களில் வீழ்த்தியது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் ஷிவம் துபே 31 பந்துகளில் 66 ரன்கள் விளாசினார். பந்து வீசிய போது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்.
இந்த ஆட்டம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அபிஷேக் சர்மா 0, இஷான் கிஷன் 18, திலக் வர்மா 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் ஷிவம் துபேவுடன் இணைந்து 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் கேப்டன் சூர்யகுமார் யாதவ். அவர் 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இன்னிங்ஸை மெதுவாக தொடங்கினார் ஷிவம் துபே. அவர் எதிர்கொண்ட முதல் 11 பந்துகளில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதன் பின்னர் ஆட்டத்தை அட்டாக் மோடுக்கு மாற்றினார். 31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும். ஹர்திக் பாண்டியா 30 மற்றும் ரிங்கு சிங் 6 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது இந்தியா.
194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நெதர்லாந்து அணி விரட்டியது. இதில் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது அந்த அணி. அந்த அணியின் பேட்ஸ்மேன்களுக்கு இன்னிங்ஸில் நல்ல தொடக்கம் கிடைத்தும் அதை பெரிய ரன்னாக மாற்ற தவறினர். முடிவில் 17 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது.
நெதர்லாந்து தரப்பில் லீட் 33, லெவிட் 24, கோலின் ஆக்கர்மன் 23, மேக்ஸ் 20 மற்றும் கேப்டன் ஸ்காட் எட்வார்ட்ஸ் 15, ஸாச் 26, நோஹா 25 ரன்கள் எடுத்தனர். இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி 3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். துபே 2 மற்றும் ஹர்திக், பும்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை துபே வென்றார்.