

சென்னை: ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்யும் வகையில் அமைச்சரவை விடுக்கும் பரிந்துரைகளை நிராகரி்க்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா? என்பது குறித்த சட்டப்பூர்வ கேள்விக்கான வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்ற முழு அமர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்த மாணவர் நாவரசுவை, கடந்த 1996-ம் ஆண்டு சீனியர் மாணவரான ஜான் டேவிட் கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த வழக்கில் ஜான் டேவிட்டுக்கு கடலூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி அவரது தாயார் எஸ்தர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை கடந்த 2024-ம் ஆண்டு விசாரித்த நீதிபதிகள், “அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்ற அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதியான ஜான் டேவிட்டை முன்கூட்டி விடுதலை செய்யக்கோரும் மனுவை தமிழக அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தனர்.
அதன்படி, ஜான் டேவிட்டை முன்கூட்டி விடுதலை செய்ய தமிழக அரசு அளித்த பரிந்துரையை ஆளுநர் மீண்டும் நிராகரித்தார். இதை எதிர்த்து ஜான் டேவிட்டின் தாயார் எஸ்தர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதேபோல ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்யக்கோரும் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்ததை எதிர்த்து பலரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதற்கிடையே ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கும் விவகாரத்தில் அரசின் பரிந்துரைகளை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றொரு வழக்கில் தீர்ப்பளித்ததால், அரசின் பரிந்துரைகளை நிராகரி்க்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்த சட்டப்பூர்வ கேள்வி்க்கான விசாரணை 3 நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் ஆளுநருக்கான அதிகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை, நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜி.கே.இளந்திரையன், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய முழு அமர்வில் நடந்தது. அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “உச்ச, உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்ய அமைச்சரவை விடுவிக்கும் பரிந்துரைகளை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை” என வாதிட்டார்.
பதிலுக்கு மத்திய அரசு தரப்பில், “இந்த விவகாரத்தி்ல் ஆளுநருக்கென தனிப்பட்ட அதிகாரம் உள்ளது என்பதால்தான் அதை உயர் நீதிமன்ற மதுரை கிளையும் உறுதி செய்துள்ளது” என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட முழு அமர்வு நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர்.