

கம்போடியாவில் இருந்து குமரி மாவட்டத்துக்கு வந்த லேக்னா, அவரது காதலன் அஜின்தாஸை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
நாகர்கோவில்: கம்போடியாவில் இருந்து வந்த இளம்பெண் கன்னியாகுமரி இளைஞரை கரம் பிடித்தார். ‘காதலுக்கு அன்பு மட்டுமே நிரந்தர மொழி’ என அப்போது அவர் கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள இடைக்கோட்டைச் சேர்ந்தவர் சத்தியதாஸ். இவரது மகன் அஜின்தாஸ் (25). ஓட்டல் மேனேஜ்மெண்ட் படித்த இவர், கம்போடியா நாட்டில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அந்நாட்டைச் சேர்ந்த லேக்னா (26) என்ற பெண்ணும் அதே ஓட்டலில் பணியாற்றியபோது, இருவருக்கும் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மலர்ந்தது.
இந்நிலையில், அஜின்தாஸ் சொந்த ஊருக்கு வந்த நிலையில், லேக்னாவும் அவரும் செல்போனில் பேசி காதலை தொடர்ந்துள்ளனர். சமீபத்தில் அஜின்தாஸின் தந்தை இறந்த நிலையில், அவருக்கு ஆறுதல் கூறுவதற்காக குமரி மாவட்டம் இடைக்கோட்டில் உள்ள காதலன் வீட்டுக்கு லேக்னா வந்துள்ளார். அப்போது அஜின்தாஸின் உறவினர்களுக்கு, இருவரின் நட்பும் தெரியவந்துள்ளது.
தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக லேக்னா தெரிவித்துள்ளார். இதற்கு அஜின்தாஸின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவே, கம்போடியா சென்ற லேக்னா, அங்கிருந்து திருமணத்துக்கு தேவையான ஆவணங்களுடன் மீண்டும் கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். மிடாலக்காட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் அஜின்தாஸின் குடும்ப வழக்கப்படி திருமணம் நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் அவர்களை வாழ்த்தினர்.
நாடு விட்டு நாடு வந்து காதலனை கரம்பிடித்த லேக்னா கூறும்போது, ‘கம்போடியாவைச் சேர்ந்த நான், இந்தியாவின் குமரி மாவட்டத்துக்கு எனது காதலர் அஜின்தாஸை தேடி வந்தேன். நாங்கள் கம்போடியாவில் ஒன்றாக வேலை செய்த இடத்தில் இந்திய உணவை சாப்பிட விரும்பினேன். அப்போது, காதலர் தயார் செய்து கொடுத்த ருசியான உணவை இருவரும் பாதிப் பாதியாக பகிர்ந்து சாப்பிட்டோம். அவரின் அர்ப்பணிப்பும், அன்பும் எனக்கு பிடித்துவிட்டது. காதலுக்கு அன்பு மட்டுமே நிரந்தர மொழி’ என்றார்.