புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி உட்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்

புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி உட்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்
Updated on
1 min read

புதுடெல்லி/ புதுச்சேரி: தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய 3 மாநிலங்களில் மொத்தம் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம், புதுச்சேரியில் தட்டாஞ்சாவடி, மேற்கு வங்கத்தில் நந்திகிராம், ரெஜிநகர் ஆகிய 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் அசாமின் நகோன் மக்களவைத் தொகுதியில் அக்.6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில், என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் முதல்வர் ரங்கசாமி மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தட்டாஞ்சாவடி எம்எல்ஏபதவியை அவர் ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்எல்ஏ அசோக் ஆனந்த் போட்டியிடுவார் என முதல்வர் ரங்கசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. தவெக கூட்டணியில் உள்ள நேயம் மக்கள் கழகம் சார்பில் விநாயகம் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் திமுகவும் களமிறங்குவதால், இங்கு மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.

மேற்கு வங்கம்: மேற்கு வங்கத்தில்கடந்த ஏப்.23, 29-ம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வர் சுவேந்து அதிகாரி, நந்திகிராம், பவானிபூர் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றார். இதில் நந்திகிராம் எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதேபோல ஏஜேயுபி கட்சித்தலைவர் ஹுமாயூன் கபீர் மேற்கு வங்கத்தின் நவாடா, ரெஜிநகர் ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றார். இதில் ரெஜிநகர் எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

அசாமில் ஒரு எம்.பி. தொகுதி: அசாமின் நகோன் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. பிரத்யுத் போர்டோலோய் சில மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் சேர்ந்தார். கடந்த ஏப்.9-ம் தேதி நடந்த அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் திஸ்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி உட்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்
பேரவையில் முதல்வர் விஜய் ஆவேசம்: சர்க்காரியா கமிஷன், அமலாக்கத் துறை அறிக்கைகளை சுட்டிக்காட்டி திமுக மீது சரமாரி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in